பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
காரைக்கால்: காரைக்காலில் குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்க, வேப்பம், அரசமரத்திற்கு (அஸ்வத்த விவாகம்) திருக்கல்யாணம் செய்து வைக்கும், நூதன வழிபாடு நடந்தது. காரைக்கால் கோட்டுச்சேரி தலத்தெருவில் சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிரே அரச மரமும், வேப்பமரமும் இணைந்து வளர்ந்துள்ளது. அரச மற்றும் வேப்ப மரத்தை சுற்றிவந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அமவாசை தினமான நேற்று முன்தினம், திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்க வேண்டியும், வேப்பம் மற்றும் அரச மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து நூதன வழிபாடு நடந்தது. அரச மரத்தை சிவனாகவும், வேப்ப மரத்தை அம்பாளாகவும் பாவித்து திருமண நிகழ்ச்சிகள் நடந்தது.
முன்னதாக, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, புனித நீரால் வேப்பம், அரச மரத்திற்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, மணமகள் வேப்ப மரத்திற்கு புதிய புடவை போர்த்தப்பட்டும், மணமகனான அரச மரத்திற்கு பட்டு வேட்டி கட்டி, வேப்பம் மரத்திற்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் வேப்பம், அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உபயதாரர்கள் கூறுகையில், கடந்த 2005ம் ஆண்டு கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அஸ்வத்த விவாகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு, திருமணம் நடந்து முடித்துவிட்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தனர்.