பதிவு செய்த நாள்
12
ஜூலை
2013
10:07
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும், பழமையான இக் கோவிலில், ஆதிகேசவப்பெருமாள், பாஷ்யகார சுவாமி, எதிராஜ நாதவல்லி தாயார், ராமர், வேணுகோபால், ஆண்டாள், ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. கடந்த 2008ம் ஆண்டு, கோவில் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டன. ராமானுஜர் மூலவர் கோபுரத்தில், தங்க தகடுகள் பொருத்தப்பட்டன. ஆதிகேசவப்பெருமாள் மூலவர் கோபுரம் தங்க முலாம் பூசி திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்த இரண்டாண்டுகளில், தங்கத் தகடுகள், கறுத்துவிட்டன. இதற்கான, காரணம் தெரியவில்லை. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோபுரத்தில் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகள், கறுத்துப் போனது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், தங்க நகை ஆய்வாளர்கள், வந்து பார்த்து விட்டு சென்றனர். தமிழ்நாட்டில் பல கோவில்களில் இதே நிலை இருப்பதால், இது குறித்து ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.