பதிவு செய்த நாள்
23
ஜூலை
2013
10:07
திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று மாலை ஆடித்தபசு கோலாகலமாக நடந்தது. இங்கு, ஹரியும், சிவனும் ஒன்றே என்னும் தத்துவத்தை விளக்குவதற்காக, தவமிருந்த அன்னை கோமதிக்கு, சங்கரலிங்சுவாமி, தமது உடலில் ஒரு பாதியை நாராயணராக இணைத்து, சங்கரநாராயணராக காட்சி தந்த நிகழ்வே ஆடித்தபசு என கொண்டாடப்படுகிறது. இவ்விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் வீதிஉலா நடந்தது. கடந்த 20ம் தேதி தேரோட்டம் நடந்தது. தபசு விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று, காலையில் தீபாராதனை நடந்தது. காலை 11.45 மணிக்கு தங்கச்சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி, தபசு மண்டபத்திற்கு வந்தார். மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். கிராமப்பகுதிகளை கொண்ட சங்கரன்கோவில் சுற்றுவட்டார மக்கள் நிலங்களில் விளைச்சல் பெருகுவதற்காக அங்கு விளைந்த வத்தல், பருத்தி போன்றவற்றை மாடிகளில் நின்றபடி மக்கள் மீது வீசினர். இரவு 11 மணியளவில், சங்கரநாராயணசுவாமி, யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுத்தார்.