பதிவு செய்த நாள்
23
ஜூலை
2013
10:07
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதில் சுவர்கள் சீரமைப்புப் பணி, 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. மதில் சுவர்கள் கட்டியபோது இருந்த, புதிய வாசல், தற்போது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 21 கோபுரங்கள் மற்றும், ஏழு பிரகாரங்களுடன், 21 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 236 அடி உயரத்தில், தென்கிழக்கு ஆசியாவிலேயே, மிக உயர்ந்த ராஜகோபுரம் உள்ளது. ஏழு பிரகாரங்களில், முதல், நான்கு சுற்று மதில் சுவர்கள், நல்ல நிலையில் உள்ளன. 5, 6, 7 சுற்று மதில் சுவர்களில், 7,000 சதுர அடிக்கும் மேல், சிதிலமடைந்துள்ளது. அனைத்து மதில் சுவர்களிலும், பராமரிப்புப் பணி மேற்கொள்ளவும், சிதிலமடைந்த மதில் சுவர்களை இடித்துவிட்டு, பழமை மாறாத வகையில், புதுப்பிக்கவும், திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு, முதல்வரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெயலலிதா, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். அறநிலையத்துறை சார்பில், 23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில், பணிகள் நேற்று துவங்கின.
இதுகுறித்து, தொல்லியல் துறை (ஓய்வு) அதிகாரி நரசிம்மன் கூறியதாவது: காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக, ஸ்ரீரங்கமும் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம். முதல், நான்கு பிரகாரங்கள், கோவில் சார்ந்தது. 5, 6, 7 ஆகிய பிரகாரங்கள், "டவுன்ஷிப் போல அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அஸ்திவாரம் குறித்து ஆய்வு செய்த போது, 3 மீ., ஆழம் தோண்டி, கருங்கற்களால், 3.5 மீ., அகலத்தில் பலமாக அமைக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக, மேற்கு, தெற்கு உத்திர வீதிகள் சந்திக்கும் இடத்தில், 50 மீ., நீளம் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகள், ஒரு மாதத்தில் முடியும். ஐந்தாம் பிரகாரத்தில் ஆய்வு செய்தபோது, மேல உத்தர வீதியில், 1.5 மீ., உயரமும், 0.7 மீ., அகலமும் உள்ள புதிய வாசல் கண்டறியப்பட்டது. தற்போது நடக்கவுள்ள பணிக்கு, கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல, இந்த வாசல் வசதியாக இருக்கும். பழமை மாறாமல் மதில் சுவர்களை சீரமைக்க, சுண்ணாம்பு, சிமென்ட், மணல் ஆகியவற்றை அரைக்க, மகாராஷ்டிராவிலிருந்து இயந்திரம் வரவழைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.