பதிவு செய்த நாள்
23
ஜூலை
2013
10:07
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று குருபவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் துவாரகாமாயி திறப்பு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை ஷீரடி சாய்பாபா கோவிலில், துவாரகாமாயி திறப்பு விழா மற்றும் குருபவுர்ணமி உற்சவ விழா நேற்று நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை மற்றும் 18 கலசங்கள் அமைத்து, கணபதி ஹோமம், நவகிரக பூஜை நடந்தது. காலை, 5:30 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு ஆரத்தி, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புதியதாக கட்டப்பட்டிருந்த துவாரகாமாயி திறப்பு விழா, கோவில் சேர்மன் கோபால் நாயுடு தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திருப்பதி சந்திரசேகர சுவாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு தீர்த பிரசாதம் வினியோகம், காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், சத்திய நாராயண பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தி மற்றும் அன்னதானம் நடந்தது. விழாவில், ஆந்திர மாநிலம், குப்பம் திராவிட பல்கலைக் கழகத்தின் முன்னாள் தலைவர் அருணாச்சலம், பெங்களூரு தொழிலதிபர்கள் கோபாலகிருஷ்ணன், துரைசாமி ராஜூ மற்றும் திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி சாய்சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். திருவள்ளூர்: இதே போல், திருவள்ளூர் டவுன் பெருமாள் செட்டி தெருவில் உள்ள ஆனந்த சாய்ராம் தியானக் கூடத்தில், குருபவுர்ணமி பூஜை மற்றும் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி காலை, 5:30 மணிக்கு மூலவருக்கு ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, ஒரு யாகசாலை அமைத்து காலை, 7:00 மணிக்கு கணபதி, லஷ்மி, நவகிரக ஹோமம் நடைபெற்றது. காலை, 9:30 மணிக்கு சம்வஸ்தர அபிஷேகம், அஷ்டோத்திரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 11:00 மணிக்கு தூனி பூஜை, மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தி மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை, 4:00 முதல் விஷ்ணு சகஸ்ரநாம மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு நாம ஜெபம், தூப ஆரத்தி, சத்ய நாராயண பூஜை, இரவு, 10:30 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. தொடர்ந்து, திருபல்லக்கில் ஆனந்த சாய்ராம் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், மணவாளநகர் மங்கள ஈஸ்வரர் கோவிலில், குருபவுர்ணமி முன்னிட்டு திருவள்ளூர் காயத்ரிபரிவார் சார்பில், ஐந்து யாகசாலைகள் அமைத்து காயத்ரி யாகம் நடந்தது.