பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
தமிழ் மாதத்தில் நான்காவதாக வருவது "ஆடி. தமிழின் பிறமாதங்களை விட, "ஆடிக்கு மட்டும், அப்படி என்ன வரவேற்பு? "ஆடியில் மட்டும் தான், "ஆன்மிகம், நம்பிக்கை, சென்டிமென்ட், குடும்பம், தொழில், வியாபாரம், என, மனித வாழ்வின் பல்வேறு விஷயங்கள் இடம் பெறுகிறது. அதுமட்டுமின்றி, பஞ்ச பூதங்களையும் சார்ந்த நிகழ்வுகள், "ஆடியில் தான் அரங்கேறுகின்றன. "ஆற்று "நீரில் முன்னோருக்கு திதி அளிப்பது, "நிலத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைப்பது, ஆடிக்"காற்றில் அம்மி பறப்பது(?), தூறலை எதிர்நோக்கி ஆகாயம் பார்ப்பது, ஆடிவெள்ளியில் "தீ மிதிப்பது, என, பஞ்ச பூதங்களும், தனக்கே அறியாமல், ஆடியில் ஆடிச்செல்கின்றன. இதையெல்லாம் விட, "தள்ளுபடி என்ற விஷயம், "ஆடியை, ஆட்டம் போடும் மாதமாக மாற்றிவிட்டது. கடைகளின் கதவு திறக்கும் முன்பே, பொருட்களை வாங்க காத்திருக்கும், வாடிக்கையாளரின் தள்ளுமுள்ளு தான், ஆடித்தள்ளுபடி. தலை தீபாவளி, தலை பொங்கல் வரிசையில், "தலை ஆடி கொண்டாடுகிறார்கள் என்றால், இந்த மாதத்திற்கு மக்கள் தரும் முக்கியத்துவத்தை, இதை விட வேறு எப்படி கூற முடியும். "ஆடியை, நாடிக் காத்திருந்தவர்களின் விருப்பங்களே இந்த ஸ்பெஷல் ..
ஆடியின் முக்கிய நாட்கள்:
தமிழ்மாதம் ஆங்கிலமாதம் விழா
ஆடி 18 ஆக.,3 ஆடிப்பெருக்கு
ஆடி 21 ஆக.,6 ஆடிஅமாவாசை
ஆடி 24 ஆக.,9 ஆடிப்பூரம்
ஆடி 26 ஆக.,11 கருடபஞ்சமி
ஆடி 31 ஆக.,16 வரலட்சுமிவிரதம்
கோடை முடிந்து மழைக்காலம் துவங்கும் முன் வரும் ஆடி மாதத்தில், அடுத்து வரும் மானாவாரி விவசாய பணிகளுக்காக உடலை தயார் செய்வதற்கு எண்ணெய் நீராடல், சத்தான ஆகாரங்கள், விளையாட்டுக்கள் என உடலை பக்குவப்படுத்தும் மாதமாக ஆடி அமைந்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில், இன்றும் இந்த ஆடி மாதத்தை, பண்டிகைக்காலமாக கொண்டாடுகின்றனர். முற்காலத்தில் அறுவடைக் காலங்களான தை மற்றும் வைகாசியில் மட்டும் இந்தப்பகுதியில் திருமணம் நடக்கும் மாதங்களாக இருந்துள்ளன. திருமணம் முடிந்ததும் மணமகனுக்கு வரதட்சனை எதுவும் வழங்கப்படுவதில்லை. ஜமுக்காளம், தலையணை மட்டுமே கொடுத்து அனுப்புவர். அடுத்து, கோடைகால பயிர்களில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, ஆடிச்சீர் கொடுக்கும் பழக்கம் இருந்தது. ஆடி பிறப்பதற்கு முன் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று ஆடிக்கு வரும்படி அழைப்பு விடுத்து,மணமக்களை பெண் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவர். நெய்யில் சுடப்பட்ட கருப்பட்டி பணியாரம், ஆட்டுக்கறி விருந்து என சத்துள்ள ஆகாரங்கள் மணமக்களுக்கு கிடைக்கும். ஆடி மாத முடிவில், சேவல், ஆடு, தட்டு முட்டு சாமான்கள், பலகாரங்கள் வைத்து சீர் கொடுத்து அனுப்புவர். ஆடி மாதத்தில் நல்ல உணவு, உடல் திறன் விளையாட்டுக்கள் என மாப்பிள்ளையின் உடலும், மனமும் அடுத்து வரும் விவசாய பணிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கும். தை மாத திருமணம் நடந்திருந்தால், பெண் கர்ப்பவதியாக இருப்பார். மாமனார் வீட்டில் கர்ப்பவதி பெண்களை ஓடி ஆடி வேலை செய்ய நிர்ப்பந்திக்க மாட்டார்கள் . இதனால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். இதற்காக ஆடி முதல் நாளில், பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். தாய்வீட்டுக்கு வந்தால் அந்த பெண்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும். குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்தால் தான் சுகப்பிரசவம் நடக்கும் என அனைத்து வேலைகளையும் அவரது பொறுப்பில் விட்டு விடுவர். இதுவே பெண் தாய் வீட்டிற்கு வரும் காரணம்.
குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு: கீதாஞ்சலி, குடும்பத்தலைவி, நாகமலை: திருமயம் அருகே கன்னங்காரைக்குடியில் குலதெய்வம் உள்ளது. ஆடி பெருக்கு அன்று மதுரையில் இருந்து வேன் பிடித்து குடும்பத்துடன் குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றுவிடுவோம். அன்றைய தினம் வெளிநாட்டில் இருப்பவர் கூட வந்து விடுவார். ஆடி அமாவாசைக்கு, ராமேஸ்வரம் சென்று முன்னோர்களுக்கு பூஜைகள் செய்வோம். ஆடி வெள்ளி, செவ்வாய் அன்று அம்மன் கோயில்களில் வழிபடுவோம்.
இளவட்டக்கல் மாப்பிள்ளை: பாப்பாத்தியம்மாள், உசிலம்பட்டி: அந்தக்காலத்தில் , ஆடியில் மாப்பிள்ளைக்கு ஆடு, கோழி கறி,நெய்யில் சுட்ட கருப்பட்டி பணியாரம் கொடுப்போம். அத்தனையையும் சாப்பிட்டு விட்டு, விளையாட்டுக்களில் கலந்து கொள்வார்கள். இளவட்டக்கல் தூக்கி எறிவது விளையாட்டு. கல்லை தூக்க முடியாவிட்டால் மாப்பிள்ளை தேங்காய், எண்ணெய் போன்றவற்றை கிராமத்திற்கு வாங்கி கொடுக்க வேண்டும். கல் நூறு கிலோ எடைவரை இருக்கும்.
தலை "ஆடி சூப்பர்: எம்.ராஜேஷ்-தீர்த்தக்கனி, ஆண்டாள்புரம், மதுரை:எங்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. தலை தீபாவளி, தலை பொங்கல் கொண்டாட, இன்னும் சில மாதங்கள் நாங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன்பாகவே, தலை "ஆடி கொண்டாட முடிந்தது. திருமணத்திற்கு பின், நாங்கள் இருவரும் பங்கேற்கும் முதல் கொண்டாட்டம், "ஆடி என்பதால், எங்களால் மறக்க முடியாது. தீபாவளி, பொங்கலை போலவே, ஆடிச்சீர், ஆடி விருந்து என கோலாகலமாக உள்ளது. இந்த நடைமுறையை, நாங்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை. பிறருக்கு நடக்க பார்த்திருந்தாலும், நமக்கு நடக்கும் போது தான், அதன் அருமை தெரிகிறது.