இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்காக , மண்ணின் தன்மை குறித்து அழகப்பா பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 2010 நவம்பர் 22 ல் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் இடத்தில் , காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் சிவநேசன் தலைமையிலான குழுவினர் , மண்ணின் தாங்கும் திறன் குறித்து ஆய்வு செய்தனர். பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் , அறநிலையத்துறை சிவகங்கை மண்டல உதவிக் கோட்டப் பொறியாளர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர். பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் கூறுகையில் "" ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்காக கடந்த 2010ல் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. மதிப்பீடு குறைவாக இருப்பதாக கூறி ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் எடுக்க முன் வரவில்லை. தற்போது முதல்பாகம் (கல்காரம் வரை) கட்டுவதற்கு ரூ.72 லட்சத்தில் புதிய மதிப்பீடு தயார் செய்து , 2013, மே மாதத்தில் டெண்டர் விடப்பட்டு, கமிஷனரின் ஒப்புதலுக்கு, இணை கமிஷனர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கமிஷனரின் உத்தரவு கிடைத்ததும் புதிய ஏழு நிலை ராஜ கோபுரம் கட்டும் பணி துவங்கும், தற்போது அந்த இடத்தில் மண்ணின் தாங்கும் திறன் குறித்து ஆய்வு மட்டும் செய்யப்பட்டுள்ளது என்றார்.