பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
திருப்பூர்: திருப்பூரை அடுத்த அலகுமலையில், விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டைக்காக, விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். வரும் செப்., 9ம் தேதி நடக்கும் சதுர்த்தி விழாவுக்காக, திருப்பூர் மாவட்டத்தில் 1,600; கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம், நீலகிரியில் 600, ஈரோடு மேற்கு மாவட்டத்தில் 600 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சிலைகள் மூன்றரை, ஐந்தரை, ஏழரை, ஒன்பது அடி மற்றும் 11 அடி உயரத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்த, 45 பேர் கொண்ட குழுவினர், அலகுமலையில், சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜன., மாதம் துவங்கிய பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்து, சிலைகளுக்கு இயற்கை வர்ணம் பூசும் பணி நடக்கிறது. அன்ன வாகனம், மயில் வாகனம், கருட வாகனம், காமதேனு வாகனம், காளிங்க நர்த்தன (நாகம்) வாகனத்தில் அமர்ந்த விநாயகர் சிலைகளும், தாமரையில் அமர்ந்த கமல விநாயகர், ராஜ விநாயகர், கற்பக விநாயகர் என, 40க்கும் மேற்பட்ட வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நிறைவடையும். சதுர்த்தி விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, அந்தந்த பகுதிகளுக்கு சிலைகள் அனுப்பி வைக்கப்படும். விழாவுக்கு பின், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு நாட்கள் கழித்து விசர்ஜனம் செய்யப்படும். காகித கூழ், கிழங்கு மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால், மீன்களுக்கு சிறந்த உணவாக பயன்படும். விவேகானந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது ஆன்மிக கருத்துகளை பரப்பும் நோக்கத்தில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும், என்றனர்.