பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
ஆர்.கே.பேட்டை: கந்ததுணி மாரியம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பட்டாடை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஆதிவாராகபுரம் ஊராட்சிக்குட்பட்ட மடுகூர் கிராமத்தில், கந்ததுணி மாரியம்மன் மற்றும் கொள்ளாபுரி அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், பால்குட அபிஷேகம் நடந்தது. கடந்த, மூன்று ஆண்டுகளாக, ஆடி பவுர்ணமி நாளில், அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. விழாவையொட்டி, மடுகூர் மற்றும் ஆதிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோவில் வளாகத்தில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். மடுகூர் விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்து, மலையடிவாரத்தில் அமைந்துள்ள கந்ததுணி மாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் புறப்பட்டு, மீண்டும் கோவில் வளாகம் அடைந்தது. பின்னர், அம்மனுக்கு, பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு நடந்த குத்துவிளக்கு பூஜையில், கந்ததுணி மாரியம்மன் பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்களுக்கு தாலிக்கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு உற்சவர்கள் வீதியலாவும், பக்தி நாடகமும் நடந்தன.