பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சிவகாமி சமேத நடராஜ பெருமான் கோவிலில், கூழ்வார்த்தல் திருவிழா சிறப்பாக நடந்தது. காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், சிவகாமி சமேத நடராஜ பெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரகார தெய்வம் தும்பவனம் மாரியம்மன். இங்கு, ஆடித் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 26ம் தேதி காலை 4:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, 27ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, அம்மன் 64 திருக்கரங்களோடு எழுந்தருளினார். நேற்று, பகல் 12:00 மணிக்கு, தும்பவனத்தம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், அம்மன் வீதி உலா வந்தார். மாலை, மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.