பேரக்குழந்தைகளைக் கொஞ்ச வேண்டும் என்று எந்த பாட்டிக்குதான் ஆசை இருக்காது! சாரதாதேவியாரின் தாய் சியாமாசுந்தரிக்கும் அப்படி ஒரு ஆசை. மகளைத் திருமணம் செய்து கொடுத்தோமே! மருமகனோ, துறவியாய் திரிகிறாரே! இப்படியிருக்க தன் மகளுக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்று மனதுக்குள் தவித்தார். தனிமையில் கண்ணீர் வடித்தார். ஒருநாள் மருமகன் ராமகிருஷ்ணர் மாமியார் வீட்டுக்கு வந்தார். சியாமா சுந்தரிக்கு ஆதங்கம் தாங்கவில்லை. மருமகனிடமேகொட்டிவிட்டர்.நான் எப்போது என் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சப் போகிறேன்! என் மகள் குழந்தை பெறும் நன்னாள் எப்போது?அம்மா! கவலைப்படாதீர்கள்.நீங்கள் உங்களுக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பிறந்து விடாதா என்றுதானே ஆதங்கப்படுகிறீர்கள். கவலைப்படாதீர்கள். உங்கள் மகள் ஆயிரம் பிள்ளைகளைப் பெறப் போகிறாள், என்றார். சியாமாசுந்தரிக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. ராமகிருஷ்ணர் சொன்னது அவளது அறிவைப் பொறுத்தவரை அவ்வளவு தான் எட்டியது. ஆனால், பிற்காலத்தில் அவரது மகள், பெறாமலே பெற்ற பிள்ளைகளாக ஆயிரம் பேரைப் பெற்றாள். எல்லாரும் அவரை மாதாஜி என்று அழைத்தனர். இன்றும் அழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆம்...சியாமாசுந்தரிக்கு தான் இன்று எத்தனை லட்சம் பேரன்மார்!