திருமலை நம்பிகள், திருப்பதி ஏழுமலையானுக்கு திருமஞ்சனம் செய்ய, அங்குள்ள பாபவிநாச தீர்த்தத்தில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். ஒருநாள், நம்பிகள் தண்ணீர் சுமந்து வந்தபோது, வழியில் வில்லும் அம்புமாக வேடனைப் போல வந்த ஏழுமலையான், ஐயா! தாகமாக இருக்கிறது! தண்ணீர் கொடும்! என்றார். நம்பியோ, இது புனித தீர்த்தம். வேங்கடநாதனுக்கு உரியது. மானிடருக்கு உரியதன்று! என்று சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார். வேடனான வேங்கடவன், அந்த குடத்தின் பின்புறம் அம்பால் குத்தி துளையிட்டு, தண்ணீரை குடித்து விட்டார். விஷயமறிந்த நம்பிகள் மிகவும் வருந்தி நின்றார். அப்போது, தன்னிடமிருந்த மற்றொரு பாணத்தால் மலையுச்சியை துளைத்து, தண்ணீர் வரச் செய்தார், ஏழுமலையான். இது ஆகாசகங்கை எனப்படும். இந்த தீர்த்தத்திலும் எனக்கு திருமஞ்சன நீர் எடுத்து வரலாம், என்றார். பின், தனது உண்மை வடிவத்தைக் காட்டி மறைந்தார். ஆகாச கங்கை, பாபவிநாசம் தீர்த்தங்களை திருப்பதியில் காணலாம்.