கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இன்று நிறைபுத்தரிசி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2013 10:08
கன்னியாகுமரி:கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை இன்று நடக்கிறது. நெற்பயிர்கள் செழித்து ஒங்கி அறுவடை அதிகரித்து நாடுசெழிக்க வேண்டி ஆண்டுதோறும் ஆடிமாதம் மூன்றாம் வெள்ளிகிழமை நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை இன்று நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனமும், நிர்மால்ய பூஜையும், தொடர்ந்து அபிஷேகமும் நடக்கிறது. காலை 5.40 மணியிலிருந்து 6.40 மணிக்குள் நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது. புதிதாக பயிர்செய்யப்பட்ட நெற்கதிர்களை கட்டு,கட்டாக எடுத்து வந்து கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடைசாஸ்தா கோயிலில் வைத்து பூஜைசெய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நெற்கதிர்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து பகவதியம்மன் கோயிலிலுக்கு எடுத்து வரப்பட்டு அம்மனின் பாதத்தில் வைத்து சிறப்புபூஜை செய்யப்படுகிறது. பின்னர் நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் நெற்கதிர்ளை வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்கவிடுவார்கள். இதன் மூலம் ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் நெற்மணிகளை வயலில் உதிர்த்து போட்டு பயிர்செய்தால் பயிர்கள் செழிக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த பூஜையில் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர், கோயில் மேலாளர் சோணாச்சலம் செய்துவருகின்றனர்.