புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று(1ம் தேதி) தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று அறந்தாங்கி வீரமாகாளியம்மன் திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 23ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம்(31ம் தேதி) தேர்த்திருவிழா துவங்கியது. இரண்டாவது நாளாக நேற்றும் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சர்வ அலங்காரத்தில் வீரமாகாளியம்மன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.