நெய்வேலி : நெய்வேலி அன்னை புத்து மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நெய்வேலி வட்டம் 3ல் உள்ள அன்னை புத்து மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி உற்சவம் கடந்த 26ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 10 நாள் நடைபெறும் உற்சவத்தில் தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முக்கிய நாளான ஆக 2 3வது ஆடிவெள்ளி உற்சவத்தையொட்டி வட்டம் 16ல் உள்ள நடராஜர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆக 3 தேதி அஷ்டோத்ர சத நாமாவளி மகா தீப ஆராதனை நடக்கிறது. ஆக 4 10ம் நாள் விடையாற்றி உற்சவமும் தொடர்ந்து சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை புத்துமாரியம்மன் சேவா சங்க நிர்வாகிகள் பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி, கஸ்தூரி ரங்கன், நாகராஜன், வேலாயுதம் மற்றும் மகளிரணி குழுவின் நிர்வாகிகள் செய்திருந்தனர். நெய்வேலி நகரில் 20க்கும் மேற்பட்ட கோவில்களில் பெண்கள் செவ்வாடை அணிந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தியதால் நகரம் முழுவதும் செவ்வாடையுடன் பெண்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.