பதிவு செய்த நாள்
05
ஆக
2013
10:08
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் வனப் பகுதியில் பக்தர்கள் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவிருதுநகர் மண்டல வனப் பாதுகாவலர் அஜீஸ் குமார் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தர மகா லிங்கம் கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். அவர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எஸ்.பி., மகேஸ்வரன் கூறியதாவது, ""பக்தர்கள் வருகை ஆக., 5,6,7, நாட்களில் அதிகம் இருக்கும். அழகாபுரி ரோட்டில் புதிதாக "செக் போஸ்ட் அமைத்து அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படும். அதில் "மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களின் நகை மற்றும் பொருட்களை திருடுபவர்களை, சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்க உள்ளனர். இரண்டு டி.எஸ்.பி., 10 இன்ஸ்பெக்டர், 30 எஸ்.ஐ., கள் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர், என்றார். மண்டல வன பாதுகாவலர் அஜீஸ் குமார் ஸ்ரீ வத்சவா கூறுகையில், ""மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக., 5,6,7, நாட்களில் வனத்துறை சார்பில் 20 குழுக்கள் தலா நான்கு பேர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவர்கள், வனப் பகுதியில் உணவிற்காக சமையல் செய்வோரை கண்காணித்து, தடுத்து, தீ விபத்து குறித்து எடுத்து கூறுவர். வனப் பகுதியில் சுற்று சூழலை பாதுகாக்க தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்வதை தடுப்பர். வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பக்தர்கள் செல்ல கூடாது என்பது குறித்து ஆங்காங்கு அறிவிப்பு பலகை வைக்கப்படும், என்றார்.