பதிவு செய்த நாள்
06
ஆக
2013
10:08
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மலையாளப்பட்டி பொங்காளியம்மன் கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத பொங்கல் விழா நடந்தது. அதில், 2,000க்கும் அதிகமான ஆண்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, மலையாளப்பட்டியில் பொங்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில், ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் விழா, ஜூலை, 30ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 4ம் தேதி இரவு, ஸ்வாமிக்கு படையல் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து, 67 கிடா பலியிடப்பட்டு விருந்து படைக்கப்பட்டது. கோவில் சமைக்கப்படும் இறைச்சியை வீட்டுக்கு எடுத்து செல்லக்கூடாது என்ற ஐதீகம் உள்ளது. எனவே, விழாவில் பங்கேற்ற கோவில் வளாகத்தில் சமைக்கப்பட்ட இறைச்சியை, ஆண்கள் அங்கேயே சாப்பிட்டுச் சென்றனர். இது குறித்து கோவில் தர்மகர்த்தாக்கள் சுப்ரமணமியம், துரைசாமி கூறியதாவது: பொங்காளியம்மன் கோவிலில், 200 ஆண்டுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பொங்கல் விழா நடந்து வருகிறது. விழாவில், சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த, 2,000க்கும் அதிகமான ஆண்கள் கலந்து கொண்டனர். வேண்டுதல் வைக்கும் பக்தர்கள், கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.