பதிவு செய்த நாள்
07
ஆக
2013
10:08
ராமேஸ்வரம் : ஆடி அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், அக்னி தீர்த்தக்கடலில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், புனித நீராடினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமர், தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள், அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர், கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட, கோயில் நான்கு ரதவீதிகளை சுற்றி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராமேஸ்வரம் வந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஜவுளித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்ட 13 கார்கள், கோயில் கிழக்கு வாசல் அம்மன் சன்னதி முன், காலை 10 முதல் மதியம் 12.30 வரை நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
* பெரும்பாலான லாட்ஜ்களில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
* குடிநீர் கிடைக்காமல், பக்தர்கள் தவித்தனர். போதிய கழிப்பறை வசதியில்லாததால், பஸ்ஸ்டாண்ட், அக்னி தீர்த்த கடற்கரை அருகே திறந்தவெளியை கழிப்பிடமாக பலர் பயன்படுத்தினர்.