பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
சென்னை : ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று மேல்மலையனூருக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே வேளையில், ஆந்திராவில் தொடரும் பதற்றத்தால், திருப்பதிக்கு பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. அமாவாசை தினமான நேற்று, மேல்மலையனூர், அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுகுறித்து, விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாலை, 5:00 மணி வரை, 600க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கினோம். இரவு, 12:00 மணியளவில், ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் என்பதால், தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார்.