பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
ஆடி அமாவாசையன்று, காளியம்மன் கோவிலில், 1,000 கிலோ மிளகாய் கொட்டி, பிரத்யங்கராதேவி யாகம் நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், மங்கலபட்டியில், பழமையான உமைய காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை தோறும், பிரத்யங்கராதேவி மகா யாகம் நடத்தப்படுகிறது. யாகம் நடத்தினால், கடன் தொல்லை, சொத்து, வியாபார பிரச்னை, பொறாமைகளால் ஏற்படும் பிரச்னை, எதிரிகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாக, பக்தர்கள் நம்புகின்றனர். இதற்காக, கோவில் வெளி பிரகாரத்தில், சக்தி கலசம் அமைத்து, அதற்கு முன், பெரிய அளவிலான யாக குண்டம் கட்டப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய், மிளகு உள்ளிட்ட பொருட்கள், யாகத்தில் போடப்பட்டன. யாக குண்டத்தில், 10 அடி உயரத்துக்கு பொருட்களும், 1,000 கிலோ மிளகாய் வற்றலும், 300 கிலோ மிளகும் போடப்பட்டது. இரவு, 10:30 மணிக்கு, சிறப்பு யாகம் முடிந்து, சக்தி கலசம் கோவிலை சுற்றி வந்தது. பின், உமைய காளியம்மனுக்கு அபிஷேக பூஜை, சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.