பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
காலபைரவர் கோயில்கள் இந்தியாவில் மட்டுமல்ல. இந்தோனேஷியா, நேபாள் முதலான வெளிநாடுகளிலும் உள்ளன. இந்தியாவில் காசி ÷க்ஷத்திரத்தை அடுத்து, ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இஸன்னபல்லி என்னும் கிராமத்தில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹைத்ராபாத் நகரிலிருந்து சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் நிஜாமாபாத் நெடுஞ்சாலையில் உள்ளது இக்கோயில். காசிக்குக் காவலரான கால பைரவர் இங்கு எப்படி வந்து கோயில் கொண்டார்? மற்றொரு கிளைக் கதை கர்நாடகத்தை ஆண்ட பாமினி சுல்தான்களுக்கு தோமகொண்டா என்ற சமஸ்தானத்தை தங்களின் கீழ் பரிபாலித்து, வரி வசூலித்துத் தர சமஸ்தானாதிபதி ஒருவர் தேவைப்பட்டார். எனவே, அங்கே பிரபலமான காச்சா ரெட்டி என்பவரை அழைத்து சமஸ்தானத்தைப் பரிபாலிக்கும் உரிமையை அஹமத் ஷா மற்றும் அவரது மகன் அஹமத் கான் ஆகியோர் அளிக்கின்றனர். இது கி.பி 1415-1435 ல் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
காச்சா ரெட்டிக்குப் பின் அவர்களின் வம்சாவளியில் வந்த காமி ரெட்டிக்கு(1550-1600) பகைவர்களிடமிருந்து சமஸ்தானத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியமாகப் பட்டது. இந்தக் குழப்பத்தில் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்ற காமி ரெட்டியின் கனவில், காலபைரவர் தோன்றி காசிக்குப் போய் தன் சிலையைக் கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்தால், அவர்களது சமஸ்தானத்தையும் அவர்களையும் தான் காப்பாற்றுவதாக உறுதி கூற, காமி ரெட்டி தன் சகோதரர் ராமி ரெட்டியுடன் காசிக்குச் சென்று சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வருகிறார்கள். அவர்களின் சமஸ்தானத்தை நெருங்கும் போது ஓர் இடத்தில் வண்டிச் சக்கரங்கள் தரையில் புதைந்து நின்று விடுகின்றன. எவ்வளவு முயன்றும் வண்டி நகரவில்லை. சிலையும் அசையவில்லை அதனால், பைரவருக்குக் கோயில் அங்கேயே எழுப்பப்பட்டது. அந்த இடம்தான் இஸன்னபல்லி
ஒவ்வொரு பிறப்பிலும் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் உடற்பிணிகளும், பில்லி சூன்யம் முதலியவற்றால் ஏற்படும் துயரங்களும் காலபைரவரை வழிபடுவதன் மூலம் தீரும் என்பது நம்பிக்கை. கிராமங்களில் எட்டு திக்கும் பிரதிஷ்டை செய்யப்படும் அஷ்டதிக் பாலர்களும் காலபைரவர் உறுதுணையுடனே செயல்பட்டு, கிராமங்களை கெடுதல்களிலிருந்து காப்பதாக நம்பிக்கை. மார்கழி மாதம் தேய்பிறையின் 8-ம் நாள் கடும் விரதம் அனுஷ்டித்து, கண் விழித்து காலபைரவரைத் தியானித்து, அருகிலுள்ள புஷ்கரிணியில் நீராடி, பைரவருக்கு தேங்காய், மலர்கள், கடுகு எண்ணெய், கறுப்பு எள் முதலியவற்றைப் படைத்து வழிபட, ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவங்கள் விலகும். கெட்ட ஆவிகள் தரும் தொல்லை நீங்கும். எடுத்த காரியங்களும் வெற்றிபெறும். சிறைப்பட்டவரும் விடுதலை பெறுவர். இந்தப் புஷ்கரணியில் நீர் கோடையிலும் வற்றுவதில்லை. இதில் முழுகி எழுந்தால் பாவங்கள் மறையும் என்பதும் ஒரு நம்பிக்கை. காலபைரவரின் சக்தியால்தான் புஷ்கரணியில் நீர்மட்டம் குறைவதில்லை என்கின்றனர். சுண்டுவிரலில் பிரம்மாவின் துண்டிக்கப்பட்ட தலையுடனும், பைரவ (நாய்) வாகனத்துடனும் சித்தரிக்கப்படும் காலபைரவர், நேபாளத்தில் சுப்ரீம் ஜட்ஜ். இவர் சன்னிதியில் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டால், அவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.