பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
பகவானிடம் நமக்கு பயம், பக்தி, விசுவாசம் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால், இறைவனிடம் பயம் எதற்கு? அவன் தான் பயத்தை போக்குகிறவனாயிற்றே? அவனிடம் நமக்கு என்ன பயம்? இந்த பயம் என்ற சொல்லுக்கு அவனை கண்டு நடுநடுங்கி பயப்பட வேண்டும் என்பது பொருளல்ல! அவனுக்கு நாம் ஏதாவது அபசாரம் செய்து விட்டோமோ, செய்து விடுவோமோ என்று பயப்பட வேண்டும். ஒரு குருவிடம், சீடன் பய பக்தியுடன் நடந்து கொள்கிறான் என்றால், குருவை கண்டு அவன் நடுங்கி, பயந்து கொண்டிருக்கிறான் என்ற அர்த்தமில்லை. அவரது மனமறிந்து, தவறுகள் நடந்து விடாமல் கவனமாக இருந்து பணிவிடை செய்வதைத்தான் பயபக்தியுடன் இருக்கிறான் என்கிறோம். குற்றம் குறை இல்லாதவனிடம் எந்த பயமும் இருப்பதில்லை.
நேர்மையாக நடப்பவன் எதற்கும் பயப்படுவதில்லை. பகவானும் சரி, மகான்களும் சரி... என்னைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம்... என்றுதான் சொல்லி இருக்கின்றனர். பகவானும், மகான்களும் மக்களுக்கு அருள் செய்யவே காத்திருக்கின்றனர். பக்தியும், விசுவாசமும் இருந்தாலே அருள் கிடைத்து விடும். பயப்பட வேண்டியதில்லை. பிரகலாதனுக்கு பகவானிடம் பக்தியும், விசுவாசமும் இருந்தது; நலம் பெற்றான். இரண்யனுக்கு இறைவனிடம் பக்தி, விசுவாசம் இல்லை; பயனடையவில்லை. குற்றவாளி, போலீசைக் கண்டதும் சந்து பொந்து வழியாக ஓடுகிறான். நேர்மையுள்ளவன் போலீஸ்காரரைப் பார்த்தாலும் பயமின்றி போய் கொண்டிருக்கிறான்.
தன்னிடம் குற்றமில்லாத போது, பயம் இருக்காது. குற்றம் உள்ளவன், பயப்படுகிறான். இந்த பயம் என்ற சொல், வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயமானது மனதில் எழும் சந்தேகத்தின் காரணமாக உண்டாவது. ஒருவன் விருந்து சாப்பிடுகிறான். வயிறு நிறைய சாப்பிட்டதும், இவ்வளவு சாப்பிட்டு விட்டோமே! உடம்புக்கு ஆகுமோ, ஆகாதோ... என்ற பயம் வந்து விடுகிறது. பணக்காரன் அரசாங்கத்தை கண்டு பயப்படுகிறான். எந்த நேரத்தில் என்ன ரெய்டு வருமோ, என்ன நோட்டீஸ் வருமோ... என்று. இளம் வயதினருக்கு வயோதிகம் வந்து விடுமோ என்ற பயம். பணமும், பொருளும் உள்ளோருக்கு திருடர்களிடம் பயம். பயணம் செய்வோருக்கு விபத்து நேர்ந்து விடுமோ என்ற பயம்.
தர்ம சிந்தனை இல்லாதோருக்கு யாசகனைக் கண்டு பயம். படிக்காத பையனுக்கு பரிட்சை என்றால் பயம். இப்படி சில வகை பயங்கள் சந்தேகத்தின் காரணமாக ஏற்படும். இன்னும் பெரிய பயம் ஒன்றுள்ளது. அதாவது, மரண பயம். மரணம் என்பது எப்போதோ ஒருநாள் வரப்போவது நிச்சயம். அது, எப்போது என்று தெரியாததால் பயந்து கொண்டே இருக்கிறான். கொஞ்சம் உடல் அசவுகரியம் ஏற்பட்டால் கூட, உடனே வைத்தியரிடம் போகிறான். இதுவும் போதாது என்று ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோசியரிடம் ஓடுகிறான். அவரும் ஜாதகத்தை பார்த்துவிட்டு, சனி போதாது, குரு போதாது என்று சொல்லி, நீடுழி வாழ சில பரிகாரங்களையும், ஹோமங்களையும் செய்யச் சொல்கிறார். இன்னும் அதையெல்லாம் செய்து கொண்டு ஓரளவு தைரியமாக இருக்கிறான். ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்? மரண பயம் தான்! இப்படி பயம் உண்டாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்படியானால் பயமே இல்லாதவன் யார்? மரணத்தைக் கண்டு பயப்படாதவன் தான் பயமற்றவன். மற்றவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றுக்கு பயந்தவர்கள் தான்!