பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தேசப்பெருமாநல்லூர். இங்கே, நாக விஸ்வநாத ஸ்வாமி திருக்கோயிலில், கல்வியையும் ஞானத்தையும் தந்தருளும் கல்வித் தெய்வமாகத் திகழ்கிறாள் வேதாந்த நாயகி.
ஈஸ்வரனின் திருச்சன்னதியை நோக்கியவாறு... வேதங்களை உச்சரிக்கும் பாவனையில் திகழ்வதால், அம்பாளுக்கு வேதாந்த நாயகி என்று திருநாமம்! இந்தத் தலத்தில் அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். எனவே, பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து உமையவளைத் தரிசித்த பிறகே, சிவனாரைத் தரிசிக்கின்றனர். வேதாந்த நாயகிக்கு வளையல் மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம். குறிப்பாக, புரட்டாசி நவராத்திரி புண்ணிய காலத்தில், வளையல் மாலை அணிவித்து அம்பிகையை மனமுருகி வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்! எனவே, நவராத்திரியின்போது ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்பாளை வழிபட்டுச் செல்கின்றனர். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இங்கு விசேஷம்தான்! ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பிகை ஜொலிப்பாள்! சர்வ அலங்காரத்தில் அம்பிகையைத் தரிசித்தாலே போதும், நம் துன்பமெல்லாம் பறந்தோடிவிடும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
தங்களுடைய குழந்தைகள் கல்வி-கேள்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், ஞானவான்களாகத் திகழ வேண்டும் என்றும் வேதாந்த நாயகியைப் பிரார்த்திச் செல்கின்றனர். அம்பாள் சன்னதியில், மகாமேரு ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகாமேருவுடன் அம்பிகை காட்சி தரும் தலங்கள் அபூர்வம் என்பதால், சக்தி தலங்களுள் சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட திருத்தலம் இது என்கின்றனர், பெண்கள்.