பதிவு செய்த நாள்
16
ஆக
2013
10:08
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு, வாடகை செலுத்துவதற்கான காலக் கெடு, நேற்றோடு முடிந்தது. இனிமேலாவது, வாடகை செலுத்தாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, திருவல்லிக்கேணி யில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு, 16.97 ஏக்கர் நிலமும், 42,380 சதுர அடியில் கட்டடங்களும் சொந்தமாக உள்ளன. சமீபத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அந்த கோவிலுக்கு செலுத்தப்பட வேண்டிய வாடகை பாக்கியில், 5 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது, தெரிய வந்தது. இதுகுறித்து, தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கும் மேல், வாடகை பாக்கி வைத்திருப்போரின், வீடு மற்றும் கடைகளில், கடந்த மாதம், இந்து சமய அறநிலைய துறை துணை கமிஷனர் ஜெகநாதன் தலைமையிலான, 15க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள், ‘நோட்டீஸ்’ ஒட்டினர். அதன் விளைவாக, 14.65 லட்சம் ரூபாய், கோவிலுக்கு வசூலானது. திடீரென வாடகை செலுத்த முடியாமல் தவித்த வாடகைதாரர்கள், கோவில் நிர்வாகத்திடம், போதிய அவகாசம் வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர். நேற்றோடு, அதற்கான அவகாசம் முடிந்தது. இதையும் மீறி, வாடகை செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அறநிலைய துறை அறிவித்திருந்தது. எனவே, கால அவகாசத் தையும் மீறி, வாடகை செலுத்த மறுப்போர் மீது, அறநிலைய துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுவே, ஆக்கிரமிப் பாளர்களுக்கு பாடமாக அமையும்’ என்பது, பக்தர்களின் கோரிக்கை.
நமது நிருபர்