பதிவு செய்த நாள்
16
ஆக
2013
10:08
நகரி:ஆடிப்பூரம், ஐந்தாம் வார விழாவை ஓட்டி, தேசம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சித்தூர் மாவட்டம், நகரி அடுத்த, டி.ஆர். கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள தேசம்மன் கோவிலில், ஆடிப்பூரம் ஐந்தாம் வார விழாவை ஓட்டி, மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோவில் வளாகத்தில், தேசம்மன் மகிஷா சூரமர்த்தினி அம்மன் அவதாரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு வண்ண மலர் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வார செவ்வாய் கிழமையை ஓட்டி மூலவரான தேசம்மன் சன்னிதியில், பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தமிழகத்தில் இருந்தும், நகரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் வந்திருந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். சில பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றி, பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். ஓம் சக்தி கோவில்: புத்தூர் டவுன், கார்வேட்நகரம் சாலையில் அமைந்துள்ள ஓம் சக்தி அம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. புத்தூர் டவுன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பெண்கள், பக்தர்கள் தலையில் கூழ் கூடங்களை சுமந்தப்படி ஊர்வலமாக ஓம் சக்தி கோவிலுக்கு சென்றனர். பின்னர், அங்குள்ள அம்மன் சிலை மீது கூழ் ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.