பதிவு செய்த நாள்
16
ஆக
2013
10:08
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டது. ஆட்டையாம்பட்டி சுற்று வட்டார பகுதிக்கு சொந்தமான ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, தேர்த்திருவிழா நடந்தது. இதில் தர்மகர்த்தா ரகுராஜ் தலைமையில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக அக்னிகுண்டம் இறங்கும் விழாவில், 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று சிறப்பு வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவில், மாரியம்மன் ரத உற்சவமும் நடக்கிறது. ஆடிப்பண்டிகை விழாவையொட்டி, தினசரி இரவு பட்டி மன்றம், வழக்காடு மன்றம், இன்னிசை கச்சேரி, வினா விடை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், கபடி, கிரிக்கெட், வழுக்கு மரம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது. ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.