பதிவு செய்த நாள்
11
மார்
2011
02:03
மதுரை அருகிலுள்ள திருவாதவூரைச் சேர்ந்த தனது பக்தருக்கு அருள் செய்ய தன் விளையாடலைத் துவங்கினார் சிவபெருமான். இவ்வூரில் திருவாதவூரார் என்னும் சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, இவர் தூங்கினாலும் கூட இவரது இதயத்தின் துடிப்பு சொல்லிக் கொண்டிருக்கும். இவர் இலக்கணம், இலக்கியம், சாஸ்திரங்களைத் தெளிவாகக் கற்றவர். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்தான். ஒருசமயம், மன்னன் அமைச்சரையும், தளபதிகளையும் வரவழைத்து, தங்கள் படை பலத்தைப் பெருக்குவது பற்றி உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது, தங்கள் குதிரைப் படையின் பலம் குறைந்து விட்டது பற்றிய பேச்சு வந்தது. அதை சீரமைக்கும் பொறுப்பை தனது தலைமை அமைச்சரான வாதவூராரிடம் அளித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொள்ள உத்தரவிட்டான். வாதவூராரும் பெரும் பொருளை எடுத்து தனியாக ஒதுக்கி வைத்து விட்டார். குதிரை வாங்கச் செல்வதற்கு நல்லநாள் பார்த்தார். அந்தநாள் வரும் வரை தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று அன்னையையும், அண்ணலையும் வணங்கி வந்தார். ஒருநாள் அவரது மனதில் மாற்றம் ஏற்பட்டது. குதிரைகளை வாங்கி ஏன் பொருளை வீணடிக்க வேண்டும்? அழியும் உயிரைக் காக்க, அழிவைத் தரும் படைபலத்தை அதிகரிப்பானேன்...!. அவரது சிந்தனை நீண்டது. அவர் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று சுந்தரேஸ்வரரை பிரார்த்தித்தார்.
பெருமானே! குதிரை வாங்குவதற்கென பாண்டியன் பெரும் பொருளை அள்ளித் தந்திருக்கிறான். படைபலத்தைப் பெருக்கினால் உலகம் அழியும், சமாதானம் ஒழியும். இந்த கொடிய நிலைக்கு இந்தப் பணம் பயன்படுவானேன்! இதை உன் கோயில் திருப்பணிகளுக்கு செலவிட்டால் நன்றாக இருக்குமே! உன் பக்தர்கள் வயிறார உண்பதற்குப் பயன்படட்டுமே! எனக்கு நீ தான் வழிகாட்ட வேண்டும், என்று உருக்கமாக வேண்டினார். இந்த நேரத்தில், அர்ச்சகர் அவருக்கு பூவும், திருநீறும் பிரசாதமாகத் தந்தார். இதை இறைவனின் அனுமதியாகவே கருதிக் கொண்டார் வாதவூரார். உடனடியாக படை, பரிவாரங்களுடன் குதிரை வாங்குவதாக மன்னனிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். குதிரை வாங்குவதற்கான பொருள் ஒட்டகங்களில் ஏற்றப்பட்டன. இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு கிளம்பிவிட்டார். திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில், தன் பக்தனின் வருகைக்காக அமர்ந்திருந்தார். இந்த உலகம் தன் காலம் உள்ளளவும் உருகி உருகி பாடப்போகும், தேனினும் இனிய திருவாசகத்தை பாடப்போகிறோம் என்பதை வாதவூரார் அறிவாரா என்ன! அவர் சிவசிந்தனையுடன் தன் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார். வழியிலுள்ள சிவத் தலங்களையெல்லாம் தரிசித்தார். முல்லை, பாலை நிலங்களைத் தாண்டி அவர் திருப்பெருந்துறையை நெருங்கி விட்டார். அவ்வூரின் எல்லையைத் தொட்டாரோ இல்லையோ... பக்தி வெள்ளம் உணர்ச்சிப் பெருக்கெடுத்து அவரது உள்ளத்தையும் உடைத்துக் கொண்டு பீறிட்டது. அதற்கு மேல் அவரால் பயணத்தைத் தொடர இயலவில்லை.
நாம் இந்த ஊரில் தான் தங்கவேண்டுமென இறைவன் திருவுளம் கொண்டு விட்டான் போலும்! இங்கேயே முகாமிட்டு விட வேண்டியது தான், என முடிவெடுத்து, படையினரையும் அங்கேயே தங்க உத்தரவிட்டார். அமைச்சரின் கட்டளையை ஏற்று, அவர்கள் அங்கே கூடாரங்களை அமைத்தனர். வாதவூரார் கோயிலுக்குள் சென்றார். ஆத்மநாதப் பெருமான் அவரது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுககுள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார். பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கினார். பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்தார். திருவடி தீட்சை என்றும், சிவ தீட்சை என்றும் இதைச் சொல்வார்கள். அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூராரின் மெய் சிலிர்த்தது. மளமளவென பாடல்கள் வெளிப்பட்டன. அந்தப் பாமாலைகளை இறைவனுக்கு சூட்டிநெருக்குருகிப் போனார்.
பாடியவர் மட்டுமல்ல! இறைவனே கூட அந்தப் பாடல்களை கேட்டு உருகிப் போனார். அப்பா! நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்... இல்லையில்லை... மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா... மாணிக்கவாசகன், என்றார் பெருமான். அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார். இனி, அவரை மாணிக்கவாசகர் என்றே நாம் அழைப்போம். மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, குருந்த மரத்தடியில் இருந்த தட்சிணாமூர்த்தி வடிவில் இருந்த சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம் செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்தார். கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார். பாண்டியமன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான்.
ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே! மன்னன் என்னை நம்பி, மக்கள் பணத்தில் குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே! எனக்கு வழிகாட்டு, எம்பெருமானே! என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது. கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றிய இறைவன், மாணிக்கவாசகா! நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். தனது மானத்தைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் வேண்டிய மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம்,அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர்.