பதிவு செய்த நாள்
06
செப்
2013
11:09
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நேற்று, அமாவாசையை முன்னிட்டு, உற்சவர் வீரராகவர் கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், அகோபிலமடம் ஆதீன பரம்பரை ஜீயர் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அமாவாசையினால் பெருமை பெற்று விளங்குபவர், வைத்திய வீரராகவப் பெருமாள். நேற்று, ஆவணி மாத அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூருக்கு வந்து, கோவில் சுற்றுப்புற பகுதியில் தங்கி, காலையில் கோவில் குளத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். அதிகாலை 5:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரையிலும், மதியம் 1:30 மணி முதல், இரவு, 8:00 மணி வரையிலும் பக்தர்கள் வரிசையில் நின்று மூலவரை தரிசித்தனர். கோவிலின் முன் பகுதியில் கண்ணாடி அறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனான உற்சவர் வீரராகவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை, 5:30 மணிக்கு மாடவீதிகளில் உற்சவர் புறப்பாடு நடைபெற்றது.