பதிவு செய்த நாள்
07
செப்
2013
10:09
மணப்பாறை: மணப்பாறை அருகே, மலையடி வாரத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த, ஆறு குபேரர் சிலைகள், வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், குதிரை குத்திப்பட்டியில், "குப்பாயி மலை என்ற தேனி மலை உள்ளது. இம்மலையில், 200 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த, குப்பாயி அம்மாள் கோவில் உள்ளது. நேற்று காலை, குதிரை குத்திப்பட்டியைச் சேர்ந்த சிலர், மலைப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றனர். மலையடிவாரத்தில் உள்ள முட்புதரில், ஆறு உலோகச் சிலைகள் கிடந்துள்ளன. இது குறித்து, தொப்பம்பட்டி வி.ஏ.ஓ.,விற்கு தகவல் அளித்தனர். மணப்பாறை மண்டல துணை தாசில்தார், சிலைகளை ஆய்வு செய்தார். 0.5 அடி உயரம் இருந்த, குபேரர் சிலை ஒவ்வொன்றும், 2 கிலோ எடை கொண்டதாக இருந்தது. மாடு மேய்த்தவர்களிடம் விசாரணை செய்த துணை தாசில்தார், சிலைகளை, மணப்பாறை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். "தொல்பொருள் துறையினர் ஆய்வுக்கு பின், சிலைகளின் தன்மை மற்றும் மதிப்பு தெரிய வரும் என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.