பதிவு செய்த நாள்
11
செப்
2013
11:09
கடலூர்: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சிறப்பு குழுவை போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 660 இடங்களில் "மெகா சைஸ் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.இவற்றில் பெரும்பாலான சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கரைக்கப்பட உள்ளது.சிலைகளை கடலில் கரைக்க வருபவர்கள், ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி சிலைகளை தள்ளும் போது, அலையில் சிக்கி உயிர் இழக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது.அதனையொட்டி இம்முறை, ஊர்வலமாக கொண்டு வரும் விநாயகர் சிலைகளை, தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே போலீசாரிடம் ஒப்படைத்து விட வேண்டும். அதனை போலீசார், நீச்சல் நன்கு தெரிந்த தன்னார்வ இளைஞர்களைக் கொண்ட குழுவினர் மூலம், கடலுக்கு எடுத்துச் சென்று கரைக்க உள்ளனர்.