கோயிலில் மூடப்பட்ட கிணற்றை மீண்டும் தோண்ட வலியுறுத்தி துண்டு பிரசரம் விநியோகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2013 11:09
கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் மழை பெய்ய வேண்டுமெனில் செண்பகவல்லியம்மன் கோயிலில் மூடப்பட்ட கிணற்றை மீண்டும் தோண்ட வேண்டுமென வலியுறுத்தி ஐந்தாவது தூண் அமைப்பினர் துண்டு பிரசரம் விநியோகம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த கிணற்றை மூடியதால் கடந்த இரண்டாண்டு காலமாக கோவில்பட்டி மற்றும் அதன் சற்றுப்பகுதியில் முற்றிலும் மழை பெய்யாமல் பொய்த்துப் போனதாக ஐந்தாவது தூண் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். கோவில்பட்டி மற்றும் சற்றுவட்டார பகுதிகளில் மழை பொய்த்துப் போனதற்கு ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்ட கோயில் கிணற்றை மூடியதே காரணமென்றும் இதுகுறித்து துண்டு பிரசரம் தயாரித்து இதுசம்பந்தமான கருத்துக்களை தெரிவித்து அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த துண்டு பிரசரத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். கோவில்பட்டி அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம் மற்றும் ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் செண்பகவல்லியம்மன் கோயில் முன்பு பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். செந்தில், வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் நாகமணி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.