பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் தங்கத்தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடந்தது. நெல்லை மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தங்கதேர் உபயதாரர் பணியாக மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணாபுரம் அருணாசலம், பரமேஸ்வரி மற்றும் உபயதாரர்கள் மூலமாக தங்கத்தேர் பணி நடந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் தங்கத்தேர் வெள்ளோட்டம் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க தங்கத்தேர் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்த தங்கதேரில் அருள்பாலித்த திருக்குமரனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தங்கதேரை இழுத்து துவக்கி வைத்தார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், "திருமலைக்குமரனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். தொடர்ந்து தங்கத்தேரை கலெக்டர் சமயமூர்த்தி, எஸ்.பி., விஜயேந்திர பிதரி, சங்கரன்கோவில் எம்எல்ஏ., முத்துசெல்வி, இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் பொன்சுவாமிநாதன், கோயில் உதவி ஆணையர் கார்த்திக் தங்கதேரை வடம்பிடித்து இழுக்க துவங்கினர். பிரகாரங்களில் தங்கதேர் வலம் வந்தபோது கூடியிருந்த முருக பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். பிரகாரங்களில் வலம் வந்த தேருக்கு கோயில் முன் பூஜைகள் நடத்தப்பட்டது. பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் தங்கதேர் வெள்ளோட்டம் நேற்று துவங்கப்பட்ட நிலையில் இதற்கான கட்டணம் 1500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தங்கதேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் கடையநல்லூர் தொகுதி செயலாளர் மாரியப்பன், வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், கோயில் தக்கார் பழனிக்குமார், டாக்டர்கள் சஞ்சீவி, சுப்பிரமணியன், பிரின்ஸ் யோகானந்த், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், மாவட்ட காங்., தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா, கரிசல் முத்தழகு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.