பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று மாலை, கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல், மேளதாளம் முழங்க, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஆலாங்காடு பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டன. கோவை சரக டி.ஐ.ஜி., கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், திருப்பூரில் கடந்த 9ம் தேதி 640 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, விளையாட்டு, கோலப்போட்டி, பூ கட்டும் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கு தேசப்பற்று குறித்த கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று நாட்கள் நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து, நேற்று விசர்ஜன ஊர்வலம் நடந்தது.வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், செட்டிபாளையம், ஸ்ரீநகர், பிச்சம்பாளையம், நெசவாளர் காலனி, எம்.எஸ்., நகர், பெருமாநல்லூர், இ.எஸ்.ஐ., கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட சிலைகள், மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, முக்கிய வீதிகள் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தன.ஊர்வலத்தை, ஈஸ்வரன், காவி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
இந்து முன்னணி கோட்ட ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார்குமார் தலைமை வகித்தார். செந்தில் மற்றும் சம்பத் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்துக்கு முன், இந்து முன்னணி கொடியேந்தி, வெள்ளை உடையில் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர். பெருமாநல்லூர் ஒன்றியம் சார்பில், தொண்டர்கள் குதிரை மீது அமர்ந்து அணிவகுத்து வந்தனர். கேரள செண்டை மேளத்துடன், இருவர், சிவன் பார்வதி வேடத்தில், குதிரை பூட்டிய சாரட் வண்டியில் சென்றனர். தொடர்ந்து, ராஜ அலங்கார விநாயகர் சிலையும், ஆக்ரோஷ காளி வேடத்தில் ஒருவரும் அமர்ந்து வந்த வாகனமும் சென்றது. அவற்றைத் தொடர்ந்து, 108 சிறு விநாயகர் சிலைகள் அமைத்த வாகனம் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.ஊர்வலம் துவங்க, வாகனங்கள் புது பஸ் ஸ்õண்ட்டில் அணிவகுத்து நிற்கும்போதே, மழை பலமாக பெய்யத் துவங்கியது. கொட்டும் மழையிலும், விசர்ஜன ஊர்வலம் கோலாகலமாகத் துவங்கியது. பி.என். ரோடு, எம்.எஸ்., நகர், லட்சுமி நகர், மேம்பாலம் வழியாக ஆலங்காடு சென்றடைந்தது.இதேபோல், செல்லம் நகர் விரிவில், கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் அண்ணாதுரை, ஜோதிமணி ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். கே.டி.சி., பள்ளி வீதி, வேப்பங்காடு பங்களா, மேற்கு பிள்ளையார் கோவில் வீதி வழியாக சிலைகள் ஆலங்காடு வந்தடைந்தன. ஊர்வலத்துக்கு முன், இந்து முன்னணியினர் கொடி அணிவகுப்பு, விநாயகர், சிவன் வேடமிட்டவர்கள் நடந்து வந்தனர்.
காங்கயம் ரோடு, நல்லூர், முத்தணம்பாளையம், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், பல்லடம் ரோடு, வீரபாண்டி, தென்னம்பாளையம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 268 சிலைகள், தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகே எடுத்து வரப்பட்டன. ஊர்வலத்தை, பா.ஜ., மாவட்ட தலைவர் மணி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்ட இந்து முன்னணி மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் முன்னிலையில், ஊர்வலம் புறப்பட்டது.கும்பகோணம் தாலுகா, மணப்பரையூரை சேர்ந்த கலைக்குழுவினரின் சிலம்பாட்டம், சேலம் குப்பம்பட்டி புதுமலர் கலைக்குழுவினரின் தப்பாட்டம், கேரள தண்டை வாத்திய நிகழ்வுகளுடன் ஊர்வலம் சென்றது. வெள்ளை சீருடை அணிந்த 25 தொண்டர்களின் காவிக்கொடி அணிவகுப்புடன், செட்டிபாளையம் டி.பி.என்., கார்டன் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை முதலாவதாகவும், அதைத்தொடர்ந்து 268 சிலைகளை வைத்திருந்த வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.மாலை 5.30 மணிக்கு, கரட்டாங்காடு ஸ்டாப்புக்கு ஊர்வலம் வந்தடைந்தது. பெரிச்சிபாளையம், திரு.வி.க., நகர், வெள்ளியங்காடு நால்ரோடு, தென்னம்பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலகம், மங்கலம் ரோடு வழியாக, இரவு 7.15 மணிக்கு ஆலாங்காடு பகுதியை சென்றடைந்தது. ஊர்வலம் துவங்கியதும் மழை கொட்டியது; தொண்டர்கள் மழையில், நனைந்தபடி ஊர்வலத்தை தொடர்ந்தனர். ஆலாங்காடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது.போலீஸ் பாதுகாப்புபதற்றம் நிறைந்த பகுதியான ஸ்ரீநகரில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வடக்கு டி.எஸ்.பி., மாரியப்பன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். கோவை சரக டி.ஐ.ஜி., கணேசமூர்த்தி, அதிரடிப்படை போலீசாருடன் திருப்பூர் நகரப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் அதிரடிப்படையினர், ஊர்வலத்துக்கு முன்னதாக பாதுகாப்புக்குச் சென்றனர். ஸ்ரீநகர் பகுதி வழியாக ஏழு வாகனங்களில் ஒன்பது சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.மேள தாளத்துடன், பட்டாசு வெடித்தபடி, ஏராளமான தொண்டர்கள் ஊர்வலமாக நடந்து வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து, வாகனங்களில் ஏற்றி அனுப்பினர். ஊர்வலம் சென்ற வழியில், வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது; மாற்றுவழியில் பஸ்கள் இயக்கப்பட்டன. பிற்பகல் முதல் மாலை வரை, புது பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர்.