பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
குறிச்சி: குறிச்சி மற்றும் குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள், நேற்று குறிச்சி குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, போத்தனூர் போலீஸ் எல்லைக்குள் இந்து முன்னணி சார்பில் 36, இந்து மக்கள் கட்சி(தமிழகம்) சார்பில் இரண்டு, விவேகானந்தர் பேரவை மற்றும் பாரத் சேனா சார்பில் தலா ஒன்று, அனுமன்சேனா சார்பில் 14 மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏழு சிலைகள் என, மொத்தம் 61 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாச்சம்பாளையம், இடையர்பாளையம் பகுதியில் 31 சிலைகளும், மதுக்கரை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 56 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகள் அனைத்தும் நேற்று மதியம் சுந்தராபுரம் சங்கம் வீதியில் அணிவகுத்து நின்றன.விசர்ஜன ஊர்வலத்தை சிவசண்முக சுந்தரபாபுஜி சுவாமிகள், ஜெகன்நாதசுவாமிகள் துவக்கி வைத்தனர். இந்து முன்னணி மாநகர் மாவட்ட துணைதலைவர் ஜீவானந்தம், மாநில பேச்சாளர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். குறிச்சி குளத்துக்கு, அமைப்பு வாரியாக ஊர்வலமாக வாகனங்களில் அணிவகுத்து சென்றன. விசர்ஜன ஊர்வலம் மதியம் 3.00 மணிக்கு குறிச்சி குளத்தை அடைந்தது. குளக்கரையில் பாதுகாப்பாக இறக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றாக விசர்ஜனம் செய்யப்பட்டன. குறிச்சி குளத்தின் கிழக்குக் கரையில் (பொங்காளியம்மன் கோவில் அருகே) மொத்தம் 76 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. குனியமுத்தூர் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள குறிச்சி குளத்தின் மேற்குக்கரையில் 25 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. குறிச்சி குளத்தின் இரு கரைகளிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு கருதி குளக்கரையோரம் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுக்கரை, செட்டிபாளையம், வாளையார் போலீஸ் எல்லையில், இந்து முன்னணி - 29, விஸ்வஇந்து பரிஷத் -25 மற்றும் பொதுமக்கள் சார்பில் இரண்டு சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாளையார் அணையில் நேற்று மாலை 56 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.