பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
பழநி: பழநி பெரியநாயகியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், சதுர்த்தி கொண்டாடிய ஏராளமான விநாயகர் சிலைகள் கரைக்கப்படாமல் உள்ளன. ஆண்டுதோறும், விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில், பழநி வட்டாரத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இவை ஊர்வலமாக எடுத்து சென்று, பெரியநாயகியம்மன் கோயில் தெப்பத்தில் கரைக்கப்படும்.
ஏமாற்றிய மழை:
போதிய மழையில்லாததால், தற்போது தெப்பக்குளம் வறண்டுள்ளது. தேவஸ்தான கிணறு,நகராட்சி லாரி மூலம் தண்ணீர் நிரப்ப முயற்சித்தும் பலனில்லை. இதனால் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சிலைகள், தீயணைப்புத்துறை வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டது. இருப்பினும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ஏராளமான விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்படாமல் உள்ளது. தெப்பக்குளத்தில் விநாயகர் சிலைகள் வருணபகவானுக்காக காத்துள்ளன. பள்ளிச்சிறுவர்கள் இச்சிலைகள் சிலவற்றை தங்கள் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். கடந்த மாதம், விநாயகர் சிலை குறித்து நடந்த ஆர்.டி.ஓ.,ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தெப்பக்குளத்தில் குழிதோண்டி தண்ணீர் நிரப்பி, விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதனை கண்டுகொள்ளவில்லை.
கைவிரிப்பு:
ஆர்.டி.ஓ.,ரவிச்சந்திரன் கூறுகையில்,""விநாயகர் ஊர்வலத்திற்கு போதிய பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு மற்றும் சுகாதாரப் பணிகள் செய்து தரப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் தெப்பத்திலுள்ள சிலைகளை கரைக்க முடியவில்லை. இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. செலவு செய்து, சிலையை வைத்தவர்கள், அதனை கரைக்கவும் முன் வர வேண்டும்,என்றார்.