பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
குற்றாலம் :குற்றாலம் குற்றாலநாதர் கோயிலின் துணைகோயிலான சித்திர சபையில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் 16ம் தேதி நடக்கிறது. சுமார் 600 ஆண்டுகளுக்கு பின்பு சித்திர சபையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. குற்றாலநாதர் கோயிலின் துணை கோயிலாக சித்திர சபை அமைந்துள்ளது. ஆடல்வல்லான், திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் சித்திர சபையும் சிவபக்தர்களால் வழிபட்டு வரப்படுகிறது. இங்குள்ள மூலிகை ஓவியங்களுக்கு பல ஆண்டுகளுக்கு பின்பு மூலிகைகளால் வர்ணம் தீட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி உபயதாரர்கள் பணியாக சுமார் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கரூரை சேர்ந்த அரவிந்த் டிரேடர்ஸ் சார்பில் ஓவியங்களில் மூலிகை வர்ணம் பூசப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஓவியங்கள் மெருகூட்டப்பட்ட நிலையில் தற்போது சித்திர சபை வண்ணமிகு ஓவியங்களால் பளிச்சென பக்தர்களுக்கு காட்சி தந்த வண்ணம் உள்ளது. நடராஜபெருமான், மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், பத்மநாதசுவாமி, எட்டு அவதாரங்களில் துர்க்கை மற்றும் பைரவ சுவாமிகள், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சித்திரங்கள் பளிச்சென காணப்பட்டு வரும் நிலையில் சித்திர சபையில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் 16ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு செப் 15ம் தேதி காலை 5 மணிக்கு அனுக்ஞை, மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி, கோபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு தீர்த்த சங்கரகர்ணம் குற்றால அருவியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனை கும்பாபிஷேக நாளான வரும் 16ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம்புறப்படுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் சித்திர சபை விமானம் மற்றும் மூலவர் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் கண்ணன், ஆணையர் தனபால், தென்காசி எம்.பி., லிங்கம், எம்.எல்.ஏ., சரத்குமார், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ராஜா, இணை ஆணையர் கவிதா, நெல்லை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் பழனிக்குமார், உதவிக்கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். திருப்பணி உபயதாரர்கள் கரூர் அரவிந்த் டிரேடர்ஸ் தங்கவேல், சென்னை ராயபுரம் ஸ்ரீதர், தென்காசி சுந்தரமகாலிங்கம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ள திருப்பணி உபய பணிகளை தொடர்ந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ், தக்கார் கண்ணதாசன் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.