பதிவு செய்த நாள்
14
மார்
2011
01:03
திருமணம் நல்லவிதமாக நடந்தேறியதும், ஆகாசராஜன் சீனிவாசனிடம், அன்பிற்குரிய மருமகனே! நீர் காட்டுக்குள் வந்த போது, உமது காதலை அறியாத பத்மாவதி உம் மீது கல்லால் அடித்தாள். அதை மனதில் வைத்துக் கொண்டு அவளை ஏதும் செய்யாமல் பாதுகாக்க வேண்டும், என வேண்டிக்கொண்டான். பெண் பிள்ளைகள் மீது தாயை விட தந்தைக்கு பாசம் இருப்பது உலக இயற்கையாக இருக்கிறது! ஆகாசராஜனும், தன் மகள் பத்மாவதியை, சீனிவாசன் வஞ்சகம் வைத்து, ஏதேனும் செய்து விடுவாரோ என்று பயத்தில் இவ்வாறு வேண்டிக் கொண்டார். சீனீவாசன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். பின்னர் மணமக்கள் சேஷாசலத்திற்கு புறப்பட்டார்கள். தாய், தந்தையைப் பிரியும் பத்மாவதி கண் கலங்கினாள். ஆகாசராஜன் மகளிடம், பத்மாவதி! கலங்காதே! பெண்கள் பிறந்த வீட்டில் தொடர்ந்து வாழ முடியாதே! நீ அதிர்ஷ்டக்காரி. அதனால் தான் அந்த பரந்தா மனையே மணம் செய்யும் பாக்கியம் பெற்றுள்ளாய். கணவரின் மனம் கோணாமல் வாழ்வதே பெண்மைக்கு அழகு. அதுவே பிறந்த வீட்டிற்கு நீ பெற்றுத்தரும் புகழ். எங்களை மறந்து விடாதே, என்று அவளது கையைப் பிடித்து சொல்லும் போது, தன்னையறியாமல் அழுதுவிட்டான். தாய் தரணீதேவி, மகளைப் பிரியும் அந்த தருணத்தில் இன்ப வேதனையை அனுபவித்தாள். இவ்வளவுநாளும் மான் போல் வீட்டிற்குள் துள்ளி விளையாடிய பெண், இன்று தகுந்த ஒருவனுக்கு சொந்தமானது குறித்து மகிழ்ச்சி என்றாலும், இனி அவளை அடிக்கடி காண முடியாதே என்ற ஏக்கமே இந்த வேதனைக்கு காரணம். பெண்ணைப் பெற்ற எல்லோரும் அனுபவிப்பது இதைத்தானே! பரிவாரங்கள் புடைசூழ சீனிவாசன், தன் மனைவியுடன் கருடவாகனத்தில் ஏறி, சேஷாசலம் நோக்கி பயணமானார். வழியில், அகத்தியரின் ஆஸ்ரமம் இருந்தது. அங்கே சென்று, அவரிடம் ஆசிபெற்றுச் செல்ல சீனீவாசன் விரும்பினார்.
ஆஸ்ரமத்திற்குள் அவர்கள் சென்றார்கள். திருமாலின் அவதாரமான சீனிவாசனை அகத்தியர் வரவேற்றார். சீனிவாசா! கல்யாணவாசனாக என் இல்லத்திற்கு எழுந்தருளியிருக்கிறாய். உன்னை பத்மாவதியுடன் பார்க்கும் புண்ணியம் பெற்றேன், என்றவர், நீ சேஷா சலத்துக்கு இப்போதே புறப்படப் போகிறாயா? அது கூடாது. புதுமணத் தம்பதிகள் திருமணமானதில் இருந்து ஆறுமாதங்கள் மலையேறக்கூடாது என்பது நியதி. உன் சொந்த ஊரே மலையில் இருந்தாலும் சரிதான்! இதைக் கடைபிடித்தே தீர வேண்டும். ஆறுமாதங்கள் கழியும் வரை நீ என் ஆஸ்ரமத்திலேயே தங்கு. நீ என்னோடு தங்குவதில் நானும் மகிழ்வேன், என்றார். முனிவரின் கட்டளையை சீனிவாசனும் சிரமேல் ஏற்று, ஆஸ்ரமத்தில் தங்க சம்மதித்தார். புதுமணத்தம்பதிகள் இன்பமுடன் இருக்க தனியிடம் ஒதுக்கித்தந்தார் அகத்தியர். சீனிவாசன் தன் அன்பு மனைவியுடன் அங்கே ஆறுமாதங்கள் தங்கினார். திருப்பதியில் இருந்து 20 கி.மீ., சென்றால் சீனிவாசமங்காபுரம் என்ற கிராமம் வரும். அங்கே, திருப்பதி பெருமாளையும் மிஞ்சும் பேரழகுடன் வெங்கடாசலபதியைத் தரிசிக்கலாம். அகத்தியரின் ஆஸ்ரமம் அமைந்த இடம் இதுதான். சீனிவாசனும், பத்மாவதியும் தங்கியதால், அவ்விடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது. இப்போது, நாம் அங்கு சென்று பெருமாளை மிக சவுகரியமாக தரிசித்து வரலாம். விழாக்காலங்கள் தவிர மற்ற நேரங்களில் சுமாரான கூட்டமே இருக்கும். இப்படியாக, சீனிவாசன் அங்கு தங்கியிருந்த வேளையில், ஒருநாள் நாராயணபுரத்தில் இருந்து ஒரு சேவகன் வந்தான். அவன் மிகவும் பதைபதைப்புடன் காணப்பட்டான். சீனிவாசனை அணுகி, நாராயணா! தங்கள் மாமனார் ஆகாசராஜன் மிகவும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அரசியார் அருகில் இருந்து மிகுந்த கவலையுடன் பணிவிடை செய்து வருகிறார். தங்களையும், அவரது திருமகளையும் பார்க்க விரும்புகிறார். தாங்கள் உடனே புறப்பட்டு வர வேண்டும், என பிரார்த்தித்தான்.
அகத்தியருக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மூவரும் நாராயணபுரம் புறப் பட்டனர். ஆகாசராஜன் கிட்டத்தட்ட மயக்கநிலையில் இருந்தார். அந்த நிலையிலும் மகளையும், மருமகனையும் வரவேற்று, சீனிவாசா, கோவிந்தா, மதுசூதனா, பத்மநாபா, நாராயணா என்று மருமகனைப் பிரார்த்தித்தார். ஐயனே! நீரே எனது மருமகனாக வாய்த்ததால் நான் சகல பாக்கியங்களையும் அடைந்தேன். தங்களை கடைசியாக ஒருமுறை பார்த் தாலே வைகுண்ட பிராப்தி கிடைத்து விடுமென நம்பினேன். அதனாலேயே, தங்களை வரச் செய்தேன், என்றார். பத்மாவதி, தந்தையையும், தாயையும் கட்டிக்கொண்டு அழுதாள். ஆகாசராஜன் அவளிடம், மகளே! உன் தம்பி வசுதானனையும், சித்தப்பா தொண்டைமானையும் கவனித்துக் கொள். அது மட்டுமல்ல, நீ பரந்தாமனுக்கு வாழ்க்கைப் பட்டதால் லோகமாதாவாக இருக்கிறாய். உன்னை நாடி வரும் மக்களின் குறை போக்குவது உனது கடமை. உன்னை மணம் முடித்து கொடுத்ததுடன், உலகத்திற்கு நான் வந்த கடனையும் முடித்துக் கொண்டேன். இனி எனக்கு ஜென்மம் வேண்டாம், என்று வேண்டியபடியே கண் மூடினார். தரணீதேவி அலறித் துடித்தாள்.ஆகாசராஜனுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. தரணீதேவி அவரோடு உடன்கட்டை ஏறினாள். தாயையும், தந்தையையும் இழந்த பத்மாவதி அடைந்த மனவேதனைக்கு அளவில்லை. கிரியைகள் யாவும் முடிந்த பிறகு, மீண்டும் அவர்கள் அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்த சமயத்தில், நாராயணபுரத்தில் ஆகாசராஜனுக்கு பிறகு பொறுப்பேற்பது வசுதானனா, தொண்டைமானா என்பது குறித்து சண்டை ஏற்பட்டது. தந்தை ஆண்ட பூமி தனக்கே சொந்தம் என்று வசுதானன் கூற, பித்ரு ராஜ்யம் தம்பிக்கே உரியது என தொண்டைமான் சொன்னான். இருவரும் தங்களுக்கே ராஜ்யம் வேண்டுமெனக் கோரி சீனிவாசனின் மத்தியஸ்தத்தைக் (தீர்ப்பு) கேட்பதற்காக அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு சென்றனர்.