பதிவு செய்த நாள்
14
மார்
2011
01:03
தொண்டைமான் சீனிவாசனிடம், மருமகனே! நாராயணபுரம் எனக்கே சொந்தம் என நான் வாதிடுகிறேன். என் அண்ணன் மகனோ அவனுக்கே வேண்டும் என்கிறான். தந்தைக்குப் பிறகு மகனா? அண்ணனுக்குப் பிறகு தம்பியா? நீர் தான் முடிவு சொல்ல வேண்டும், என்றான். சீனிவாசன் அவனிடம், இரண்டுமே சரிதான்! எனவே, இதற்கு தீர்வு வீரம் தான். யாரொருவன் தைரியசாலியோ அவன் எந்த நாட்டையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர தகுதிபெற்றவன் ஆகிறான் என்பது உலகத்தின் பொது நியதி. சிறிய மாமனாரே! நீங்கள் இருவரும் போரிடுங்கள். வெற்றி பெறுபவர் ராஜ்யமாளட்டும்,என்றார். இந்த யோசனையை வசுதானனும் ஏற்றான். சிறிய தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் போரில் சீனிவாசன் யார் பக்கம் என்ற கேள்வி எழுந்தது. தொண்டைமானே இந்தப் பிரச்னையைக் கிளப்பினான். போர் நடக்கும் போது, பலரது ஆதரவைக் கேட்பது வாடிக்கையானது. சீனிவாசா! நான் உமது பரமபக்தன். உம் ஆதரவை எனக்குத் தர வேண்டும், என்றான். வசுதானனும், தன் மைத்துனரிடம் ஆதரவு வேண்டுமென விண்ணப்பித்தான். இருவருமே எனக்கு வேண்டியவர்கள். எனவே, இருவருக்குமே என் ஆதரவைத் தருகிறேன், என்று குழப்பினார் சீனிவாசன். மாயக்கண்ணன் அல்லவா அவன். சீனிவாசா! அதெப்படி இயலும்? யாராவது ஒருவருக்குத் தானே ஆதரவைத் தர முடியும்? நீர் இரண்டு பக்கமும் எப்படி நின்று போராடுவீர், என்று தொண்டைமான் கேட்கவும், நானும், என் சக்கராயுதமும் ஒன்றே என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? எனக்கேட்டார் சீனிவாசன். ஆம் என்ற தொண்டை மானிடம், அப்படியானால், என்னை யாராவது ஒருவர் தன் பக்கம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெற்றியைத் தவிர வேறெதையும் அறியாத என் சக்ராயுதத்தை ஒருவர் பெற்றுக் கொள்ளுங்கள், என்றார் சீனிவாசன். அதையும் நீரே முடிவு செய்து விடும், என்று இருவரும் வேண்ட, நான் வசுதானன் பக்கம் இருக்கிறேன். சக்ராயுதம் தொண்டைமானுக்கு தரப்படும், என்றார் சீனிவாசன்.
இருவரும் அதை ஏற்றனர். சீனிவாசனின் பரமபக்தனான தொண்டைமானுக்கு, சீனிவாசனின் சக்கரத்தைச் சுமப்பதில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அது மட்டுமல்ல, சக்கரம் இருக்குமிடத்தில் வெற்றி உறுதி என்றும் அவன் நம்பினான். மாணவர்கள் கல்வியில் முதலிடம் பெற்றுத் தேற வேண்டுமானால் சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும். அவரை தினமும் ஆறுமுறை சுற்றி வந்து, சுதர்சனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தந்நோ சக்ர ப்ரசோதயாத்! என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுபவர்கள் கல்வி வளம், வியாபாரத்தில் லாபம், தொழில் அபிவிருத்தி, பணியில் உயர்வு, கை விட்டுப்போன சொத்து கிடைத்தல், தைரியம், நம்பிக்கை ஆகியவற்றைப் பெறுவார்கள். சீனிவாசனின் சக்கரம் கையில் இருப்பதால் நாடு தனக்கே சொந்தம் என்ற நம்பிக்கை தொண்டைமானுக்கும் ஏற்பட்டது. இருவரும் நாராயணபுரம் திரும்பினர். போர் துவங்கியது. சீனிவாசனும், பத்மாவதியும் அகத்தியரின் அனுமதியுடன் நாராயணபுரம் சென்றனர். கடும் போரில், மைத்துனன் வசுதானனுக்கு ஆதரவாக சீனிவாசன் களத்தில் நின்றார். ஆனால், தொண்டைமானின் தீவிர பக்தியும், போரில் கொண்ட ஈடுபாடும் அவனது கையையே ஓங்க வைத்தது. தொண்டைமானின் மகனும் இந்தப் போரில் கலந்து கொண்டான். போரில் வெற்றிபெறும் வேகத்தில், சக்ராயுதத்தை வசுதானன் மீது ஏவினான். அதை சீனிவாசன் தடுத்து தன் மார்பில் தாங்கினார். அவர் மயங்கி விழுந்துவிட்டார். வசுதானன் பதை பதைத்தான். தகவலறிந்து பத்மாவதி ஓடி வந்தாள். கணவரின் மார்பில் தைத்திருந்த சக்கரத்தை எடுத்தாள். சீனிவாசனின் காயத்துக்கு மருந்து தடவினாள். சீனிவாசன் எழுந்தார். நாராயணனையே அடித்து விட்டோமே என தொண்டைமான் பதறினான். பத்மாவதி தன் கணவரிடம், ஸ்ரீமன் நாராயணா! இதென்ன விளையாட்டு! கையில் தவள வேண்டிய சக்கரத்தை மார்பில் தாங்கினீர்களே! இருவருக்கும் உங்களையே பிரித்து தந்த நீங்கள், இந்த சாதாரண மண்ணையும் இருவருக்கும் பிரித்து கொடுத்து விட வேண்டியது தானே! என்றாள்.
சீனிவாசன் எழுந்தார். தொண்டைமான் அவர் முன்னால் கண்ணீர் மல்க நின்றான். தொண்டைமானே கலங்க வேண்டாம். முற்பிறவியிலும் நீ எனது பக்தனாக இருந்தாய். அதனால், இப்பிறவியில் அரச குலத்தில் பிறக்க வைத்தேன். முற்பிறவியில் உன் பெயர் ரங்கதாசன். ஒரு பெண்ணை நீ விரும்பினாய். அது நிறைவேறவில்லை. இந்த ஜென்மத்தில் அவளே உனக்கு மனைவியாக வாய்த்தாள். சக்ராயுதம் உம்மிடம் சிறிது காலம் இருந்ததால் பெண்கள் மீதான மயக்கம் தீர்ந்து விடும். இனி, எனக்கு மட்டுமே தொண்டு செய்து என் பதம் அடைவாய். அதுவரை நாராயணபுரத்தை நீயும், வசுதானனும் இணைந்து ஆள்வீர்களாக! என வாழ்த்தினார். பின்னர், தொண்டைமானே! நீர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், என்றார் சீனிவாசன். ஐயனே! உங்களுக்கு உதவ யார் பூமியில் உண்டு? கட்டளையிடுங்கள். என் சிரமே பறிபோனாலும் தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுவேன், என்றார். தொண்டைமானே! நானும், பத்மாவதியும் அகத்தியர் ஆஸ்ரமத்தில் எங்கள் வாசத்தை முடிக்கும் காலம் நெருங்கி விட்டது. நாங்கள் சேஷாசலம் திரும்புவதற்குள் நீர் எனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும். வராகசுவாமி எனக்கு கொடுத்த நிலம் அங்கிருக்கிறது. அங்கே கோயில் எழுப்பலாம். கலியுகம் முடியும் வரை நான் அங்கே தங்குவேன், என்றார். தொண்டைமான் அதை ஏற்றான். சீனிவாசனுக்கு கோயில் கட்டும் பணியை பறையறிந்து அறிவித்தான். தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்தான். சேஷாசலத்தில் அழகிய கோயில் எழுப்பப் பட்டது. அதுவே, நாம் இன்று காணும் திருப்பதி மலைக் கோயில்.