பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவில்களின் திருப்பணிகள் நீண்ட இழுபறிக்கு பின் விரைவில் துவக்கப்பட உள்ளது.புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள, பிரசித்திப் பெற்ற வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் கடந்து விட்டது.புதிதாக திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக, வேதபுரீஸ்வரர் கோவிலில், கடந்தாண்டு அக்டோபர் 29ம் தேதியன்றும், வரதராஜப் பெருமாள் கோவிலில், நவம்பர் 30ம் தேதியன்றும் பாலாயனம் செய்யப்பட்டது. திருப்பணிக்காக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் தொழில் நுட்பக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், இரு கோவில்களையும் பார்வையிட்டு, திட்ட மதிப்பீட்டை தயார் செய்தனர்.இரு கோவில்களிலும், 14 கோடியே 28 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில், திருப்பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், திருப்பணிகளை உடனுக்குடன் துவக்க முடியவில்லை. பாலாயனம் செய்யப்பட்டு விட்டதால், மூலவரை தவிர்த்து பெரும்பாலான சன்னதிகளில் விக்ரகங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும், தீர்த்தவாரி உள்ளிட்ட விழாக்களில், உற்சவர் புறப்பாடு நடப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. கோவிலில் விழாக்கள் நடத்துவதும் தடைபட்டது. பாலாயனம் செய்யப்பட்டு, ஓர் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையிலும், எந்தவித வேலையையும் துவக்காததால், பக்தர்கள் பெரிதும் வேதனையடைந்தனர். இந்நிலையில், பொதுப்பணித் துறையினர் அளித்த மதிப்பீட்டுக்கு, இந்து அறநிலையத் துறையினர், ஒருவழியாக தற்போது ஒப்புதல் அளித்துள்ளனர். முதற்கட்டமாக, இரு கோவில்களிலும் ஏழு பணிகளுக்கு, ஓரிரு நாட்களில் டெண்டர் வைக்கப்பட்டு, வேலை துவக்கப்பட உள்ளது.வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆஞ்ஜநேயர் சன்னதி, ஊஞ்சல் அலங்கார மண்டபம் புதுப்பித்தல், ராமர் சன்னதி மேல்தளம் புதிதாக அமைத்தல், ஒட்டுமொத்த கோவிலின் மேல்தளம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வேதபுரீஸ்வரர் கோவிலில் நடராஜர் சன்னதி புதுப்பித்தல், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகளுக்குள் சென்று அபிஷேகம் செய்யும் வகையில் பெரியதாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இந்த இரு கோவில்களை தவிர, மணக்குள விநாயகர் கோவிலிலும், 3 கோடியே 10 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவில் வளாகம் அகலப்படுத்தப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பருக்குள், கட்டுமானப் பணிகள் முடிந்து விடும். பின், சுதை வேலைகள், வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.தருமபால சோழனால் கட்டப்பட்ட, பழமைவாய்ந்த கோவிலான திருக்காமீஸ்வரர் கோவிலிலும், 11 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது."எடுத்துக்கட்டி மண்டபங்கள் அமைக்கும் பணி முடிந்து விட்டது. கோவில் முன்மண்டபம், முருகன் சன்னதி பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இதுபோல, முத்தியால்பேட்டை தென்கலை சீனுவாசப் பெருமாள் கோவில் திருப்பணியும் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஐந்து திருக்கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள் ளனர்.