பதிவு செய்த நாள்
30
செப்
2013
10:09
கோட்டூர்புரம்: கோட்டூர்புரம் துலுக்காணத்தம்மன் கோவில் அமைந்துள்ள சாலை முழுவதும் மாமிச கடைகளால் க்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகில் துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது. பகுதிவாசிகளின் வேண்டுகோளின் பேரில், கடந்த இரு வாரங்களுக்கு முன், இந்து சமய அறநிலையத் துறை அந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது.அந்த கோவிலுக்கு செல்லும் சாலை, 20 மீன் கடைகள், 15 காய்கறி கடைகள், ஆறு கருவாட்டு கடைகள், கோழிக்கறி, மற்றும் ஆட்டுக்கறி கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், தினசரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தர்மசங்கடத்திற்கும் சிரமத்திற்கும் உள்ளாக நேரிடுகிறது. இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த கடைகளுக்கு மாற்று இடம் ஏரிக்கரை தெருவில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டது. உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் தங்கள் லாபத்திற்காக கடைகளை இங்கே அனுமதிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அந்த கோவிலுக்கு தனி செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை. நியமிக்கப்பட்ட உடன், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.