பதிவு செய்த நாள்
01
அக்
2013
11:10
ஈரோடு: மலை கோவிலில் பக்தர்களுக்கு தொல்லை தரும் பிச்சைக்காரர்களை விரட்டியடிக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு அடுத்த பெருமாள் மலை கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். ஈரோடு, பவானி, குமாரபாளையம், சித்தோடு, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்வார்கள். மலை கோவிலில், படி நெடுகிலும் பிச்சைக்காரர்கள் ஆக்கிரமித்து, பிச்சை எடுக்கின்றனர். மலை கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய வருபவர்கள் மட்டுமின்றி, திரும்பி வருபவர்களையும் ஏற, இறங்கவிடாமல் தொல்லை கொடுத்து பிச்சை எடுக்கின்றனர். பிச்சைக்காரர்கள் தொல்லையால் படியில் இருந்து கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் பக்தர்கள், பிச்சை போட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இதில் சிலர் மயில் இறகை, பக்தர்கள் தலையில் வைத்து ஆசிர்வதிப்பது போன்று செய்வதும், நூதன முறையில் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். மலை கோவில் நெடுகிலும், போலீஸார் போடப்பட்டுள்ளனர். அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கவுன்ட்டரும் போடப்பட்டுள்ளது. ஆனாலும், இவர்களை மீறி பிச்சைக்காரர்கள் தொடர்ந்து பக்தர்களுக்கு தொந்தரவு அளித்த வண்ணம் உள்ளனர். இவற்றை போலீஸார் கண்டும், காணாமல் உள்ளதாக பக்தர்கள் புலம்புகின்றனர். வரும் வாரங்களிலாவது, மலை கோவில் படி நெடுகிலும், ஆக்கிரமித்து பக்தர்களை மிரட்டி வரும் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும், என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.