பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
மதுரை: நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு சர்வம் பக்தி மயம் பெயரில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு கொலு கண்காட்சி நாளை (அக்.,5) காலை 7 மணிக்கு துவங்குகிறது. இக்கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 2012ல் தசதர்ப்பம் பெயரில் கொலு கண்காட்சி நடந்தது. இந்தாண்டு சர்வம் பக்திமயம் பெயரில் நடக்கவுள்ள சிறப்பு கொலு கண்காட்சியில் ஆயிரக்கணக்கில் பொம்மைகள் இடம் பெறவுள்ளன. இதற்கான வடிவமைப்பை சென்னை மயிலை மூவர் குழு மேற்கொண்டுள்ளது. நான்கு யுகங்களை குறிக்கும் வகையில் ஒவ்வொரு யுகத்தையும் தத்ரூபமாக விளக்க தனித்தனி கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. 108 சிவதாண்டவம்: தெய்வகடாச்சம், லட்சுமிகடாச்சம், கைலாயம், சிவபெருமானின் 108 சிவதாண்டவம், பஞ்சபூதங்களை குறிக்கும் கொலு பொம்மைகள் இடம் பெறுகின்றன. மதுரை பக்தி தலைப்பில் சித்திரை தேரோட்டம், தெப்பத்திருவிழா, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல், மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பு குறித்து விளக்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் இரண்டாம் பிரகாரத்தில் சிறப்பு கொலு கண்காட்சிக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இன்று (அக்.,5) முதல் அக்.,14 வரை தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியை காணலாம், என கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது. தினமும் அலங்காரம்: நாளை (அக்.,5) ராஜராஜேஸ்வரி அலங்காரம். அக்., 6ல் கருங்குருவிக்கு உபதேசம் செய்தல். அக்., 7ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது. அக்., 8ல் நாரைக்கு முக்தி கொடுத்தது. அக்., 9ல் பிட்டுக்கு மண் சுமந்தது. அக்., 10ல் எல்லாம் வல்ல சித்தர் திருக்கோலம். அக்., 11ல் முத்தங்கி சேவை. அக்., 12ல் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம். அக்., 13ல் சிவபூஜை திருக்கோலம். அக்., 14ல் விஜயதசமி. தினமும் மாலை 4.30 மணிக்கு கர்நாடக சங்கீதம், இதையடுத்து பரதநாட்டியம், பக்தி மெல்லிசை, ஆன்மிகச் சொற்பொழிவு, அக்.,14ல் மாலை 4.30 மணிக்கு வீணை இசை வழிபாடு மற்றும் புல்லாங்குழலில் தமிழிசை போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.