பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
நாகர்கோவில்: பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனிக்கு, மாநில எல்லையான களியக்காவிளையில், கேரள போலீசின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையுடன், வரவேற்பு கொடுக்கப்பட்டது. மன்னர் காலம் முதலே, பாரம்பரிய வழக்கத்துடன் நவராத்திரி பவனி, தமிழ்நாடு - கேரள மாநிலங்களுக்கிடையே நடைபெற்று வருகிறது. சரஸ்வதி தேவி, முன்னுதித்த நங்கை, முருகன் விக்ரகங்கள, யானை, பல்லக்கில் எடுத்து செல்லப்படும். நேற்று முன்தினம் காலை, கன்னியாகுமரி மாவட்டம், பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து, இந்த ஊர்வலம் புறப்பட்டது. இதில், கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொண்டார். நேற்று மதியம், இந்த பவனி, கேரள மாநில எல்லையான களியக்காவிளைக்கு வந்தது. தமிழக போலீசார் ஒரு புறம் அணிவகுக்க, மறுபுறம், கேரள போலீசார் துப்பாக்கியுடன் அணிவகுக்க, கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் முன்னிலையில், சுவாமி சிலைகள், கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். நேற்று இரவு, நெய்யாற்றின் கரையில் தங்கிய பவனி, இன்று இரவு, திருவனந்தபுரம் சென்றடைகிறது. நாளை, நவராத்திரி பூஜை துவங்குகிறது.