பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவ உண்டியல் வருமானமாக, 14.87 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, என, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கோபால் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இம்மாதம், 5ம் தேதி துவங்கிய பிரம்மோற்சவம், 13ம் தேதியுடன் நிறைவடைந்தது. கடந்த ஆண்டில் இரு முறை பிரம்மோற்சவம் நடந்ததால், அதற்கு முந்தைய ஆண்டு, நடந்த பிரம்மோற்சவத்துடன் ஒப்பிடுகையில், உண்டியல் வருமானம், 7 சதவீதம் குறைந்துள்ளது. லட்டுப் பிரசாத விற்பனையில், 35 சதவீதம், போக்குவரத்துக் கழகத்தின் வருமானத்தில், 53 சதவீதம், முடி காணிக்கை வருவாயில், 4 சதவீதம் குறைந்திருக்கிறது. வாகன சேவைகளை தரிசிக்க, நான்கரை லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். இது, 2011 விட, 6 சதவீதம் குறைவாகும். வாடகை அறைகள், 300 ரூபாய் விரைவு தரிசனம் ஆகியவற்றின் மூலம், அதிக வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். ஆனால், எந்த ஆண்டும் இல்லாதவாறு, இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரும் குறைபாடு ஏற்பட்டதாக, பக்தர்கள் தெரிவித்து உள்ளனர். வாகன சேவைகளை தரிசிக்க வந்த பக்தர்கள், பாதுகாப்பு போலீசார், தேவஸ்தான ஊழியர் ஆகியோரிடையே, அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி வரை சென்ற சம்பவங்கள் நடந்தன. இது, பக்தர்களை வேதனைப்படுத்தியுள்ளது. பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, தீர்த்த வாரிக்காக, திருக்குளத்திற்கு வந்தார். அங்கு, சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அச்சமயத்தில், அங்கு கூடியிருந்த பக்தர்களும், புனித நீராடினர். இரவு தங்கப் பல்லக்கில், மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில், பக்தர்கள் புடைசூழ வலம் வந்தார். இரவு, 9:00 மணிக்குப் பிறகு, பிரம்மோற்சவம் முடிந்ததன் அடையாளமாக, கொடி இறக்கம் நடைபெற்றது.