பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
நாகர்கோவில்: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலத்தில், சுவாமி தரிசனத்துக்கு "ஆன்லைன் முன்பதிவு, இன்று துவங்குகிறது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிரிக்கும் போது, சுவாமியை தரிசிக்க, 10 மணி நேரம் வரை, வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க, இரு ஆண்டுகளுக்கு முன், சோதனை அடிப்படையில், ஆன் லைன் முன்பதிவை, கேரள போலீசார் அறிமுகம் செய்தனர். கடந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த திட்டம் மூலம் பயன் பெற்றனர். இந்த ஆண்டு, மண்டல சீசன், நவ., 16ல் துவங்குகிறது. இதையொட்டி, ஆன்லைன் முன்பதிவு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. கேரள போலீசின், www.sabarimalaq.com என்ற இணையதளத்தில், கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்தால், சுவாமி தரிசனத்திற்கான முன்பதிவு நேரம் கிடைக்கும். விண்ணப்பிக்கும் போது, பதிவு செய்யும் அடையாள அட்டைகளையும், பதிவு செய்த பின் கிடைக்கும் கூப்பனையும், சபரிமலைக்கு வரும் போது, எடுத்து செல்ல வேண்டும். பம்பையில் உள்ள கவுன்டரில், இதை பதிவு செய்து, சன்னிதானம் செல்ல வேண்டும். ஆன்லைன் பதிவு முறைக்கும், தரிசனத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.