பதிவு செய்த நாள்
16
அக்
2013
10:10
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை காலை உஷபூஜைக்கு பின், புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெறுகிறது. இன்று மாலை, 5.30 மணிக்கு, மேல்சாந்தி தாமோதரன் போற்றி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதன்பின், வேறு எந்த பூஜையும் நடக்காது. இரவு, 10:00 மணிக்கு நடை மூடப்படும். நாளை காலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம்,நெய் அபிஷேகம் நடக்கிறது. அதன்பின், காலை 7:30 மணிக்கு உஷபூஜையும், பின் புதிய மேல்சாந்திக்கான குலுக்கல் தேர்வும் நடக்கிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத்தேர்வு மூலம் தயாரித்துள்ள பட்டியலில் இருந்து, ஐயப்பன் கோயிலுக்கும், மாளிகைப்புறத்தம்மன் கோயிலுக்கும், தலா ஒருவர் மேல்சாந்தியாக, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் ஓராண்டு சபரிமலையில் தங்கி, பூஜைகள் நடத்துவர். வரும், 21ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை மூடப்பட்ட பின், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக, நவம்பர்,1 ல், நடை திறக்கப்பட்டு, மறுநாள் இரவு, 10:00 மணிக்கு மூடப்படும்.