பதிவு செய்த நாள்
16
அக்
2013
10:10
மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றில் அம்மன் கோவில் மூழ்கியதால் பூஜைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கரட்டு மேடு- ஊமப்பாளையம் இடைப்பகுதியில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கதவணை அமைத்து, தண்ணீர் தேக்கி வைத்து, நீர் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு, இதற்காக, தற்போது, 25 அடிக்கு தண்ணீர் தேக்கி வைத்து, மின் உற்பத்தி செய்யும் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து பின்னோக்கி ஆற்றில் நீர் தேக்கம் கோவிந்தம்பிள்ளை மயானம் வரை, பவானி ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், ஊட்டி ஆற்றுப்பாலத்திற்கு அருகே உள்ள பவானி அம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில், கருப்பராயன், விநாயகர் ஆகிய சிறிய கோவிலும் உள்ளது. மின் உற்பத்தி கதவணையில் 25 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கும் போது, கோவிலில் பாதி அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், சுவாமி சிலைகள் மூழ்கி விடுகின்றன. இதனால் பூஜைகள் ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. காலை நேரத்தில் தண்ணீர் தேக்கி வைக்காமல் இருந்தால், சுவாமிகளுக்கு பூஜை செய்ய வசதியாக இருக்கும். எனவே, கதவணை மின்வாரிய அதிகாரிகள், காலை நேரத்தில் தண்ணீர் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.