பதிவு செய்த நாள்
16
அக்
2013
10:10
திருப்பூர்: பழைய இரும்பு கடையில், புதைக்கப்பட்ட பித்தளை சாமி சிலைகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். திருப்பூர் ரூரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, பலவஞ்சி பாளையம், வெள்ளியங்காடு, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில், பனியன் துணிகள் மற்றும் பனியன் ரோல்கள் திருட்டு போனது. இது தொடர்பாக, வீரபாண்டி மற்றும் கல்லாங்காடு பகுதிகளை சேர்ந்த சக்தி, கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணா நகரில் உள்ள ராஜேந்திரனின் பழைய இரும்பு கடையில் சோதனை நடத்தினர். அங்கு பனியன் ரோல்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இரும்பு கடையின் பின்புறம் சந்தேகத்தின் பேரில் தோண்டி பார்த்த போது, பித்தளையால் செய்யப்பட்ட விநாயகர், கிருஷ்ணர், புத்தர், நடராஜர் உள்பட 15 சாமி சிலைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் மூன்று பேர் கொடுத்த தகவலின் பேரில், மேலும் இருவரிடம் விசாரித்து வருகின்றனர். பனியன் ரோல் திருடச் சென்ற இடங்களில், அழகு மற்றும் வாஸ்துக்காக வைக்கப்பட்டிருந்த பித்தளை சிலைகளை திருடியதாக அவர்கள் தெரிவித்தனர். இந்நபர்களுக்கு வேறு பகுதிகளில் நடந்த சிலை திருட்டுகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலை களின் மதிப்பு, அவை திருடப்பட்ட இடம் என எந்த விவரமும் நேற்று மாலை வரை தெரியவில்லை. இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.