குலசேகரபட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரன் வதம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2013 10:10
உடன்குடி: குலசேகரன்பட்டணத்தில் லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் அன்னை முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.அப்போது பக்தர்கள் ஒம் காளி, ஜெய் காளி என கோஷங்கள் எழுப்பினர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. இக்கோயில் தசரா திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றம் முதல் ஒவ்வொருநாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.பின்னர் இரவு 10.20 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளினாள். சூரன் முன்னே செல்ல அன்னை பின்னால் கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு வந்தடைந்தாள் அன்னையிடம் ஆணவத்தோடு சூரன் போரிட வலது இடது பக்கம் சுற்றி வந்தான். அகிலத்தை காக்கும் அன்னை முத்தாரம்மன் ஆக்ரோஷத்துடன் தனது சூலாயுதத்தால் 11.48 மணிக்கு சூரனைஅழித்தாள். அப்போது அங்கு கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி ஜெய் காளி என கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து சிங்க முகத்துடன் தோன்றிய சூரன் அன்னையிடம் போரிட இரண்டு பக்கமும் சுற்றி வந்தான். அப்போது அன்னை மீண்டும் 11.55 மணிக்கு சூரனை வதம் செய்தாள்.மீண்டும் சூரன் எருமை தலையுடன் தோன்றி அன்னையிடம் போர் புரிய அழைத்தான் கடும் கோபம் கொண்ட அன்னை இரவு 12.05 மணிக்கு எருமை தலையுடன் இருந்த மகிஷாசூரனை வதம் செய்தாள்.அன்னையை ஏமாற்றிய சூரன் சேவல் வடிவம் கொண்டு அன்னையிடம் போர் தொடுத்தான். அன்னை முத்தாரம்மன் தனது முழுபலத்தையும் பயன்படுத்தி இரவு 12.10 மணிக்கு அகந்தையுடன் போரிட்ட சூரனை வதம் செய்தாள். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அன்னையை வாழ்த்தினர். பின்னர் கடற்கரையில் உள்ள மேடையில் அன்னையை சாந்தப்படுத்தும் சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்னர் சிதம்பரேஸ்வரர் கோயில் எழுந்தருளிய அன்னைக்கு சிறப்பு பூஜைகளும் அதனைத்தொடர்ந்து கோயில் கலையரங்கத்தில் சிறப்பு பூஜைகளும் நடந்தது.இதில் மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச்செயலாளர் மனோகரன், தண்டுபத்து ராமசாமி,முருங்கை மகாராஜன்,உடன்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் அம்மன்நாராயணன்,கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் ஆதிநாராயணன் மாநில இந்து முன்னணி துணைத்தலைவர் ஜெயக்குமார், சந்தையடியூர் ரவிராஜா, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் தாண்டவன்காடு கண்ணன்,பிச்சிவிளை சுதாகர்,மாவட்ட காங்., பொதுச்செயலாளர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். சூரசம்ஹாரம் நடந்து முடிந்தவுடன் அம்மன் பூஞ்சப்பரத்தில் பவனி நடந்தது.நேற்று மாலை சப்பரம் இறங்கியதும் காப்புகள் அவிழ்க்கப்பட்டு அனைவரும் விரதத்தை முடித்தனர். ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.