பதிவு செய்த நாள்
21
அக்
2013
11:10
மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் நடந்த,திருமலையில் ஒரு நாள் வைபவ நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.மோகனூர் காவிரிக்கரையோரம், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி பத்மாவதி தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் திருமலையில் ஒரு நாள் வைபவ விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. திருமலையில், பெருமாளுக்கு, அதிகாலை முதல், இரவு வரை நடக்கும் சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் இத்திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள கல்யாண பிரசன்ன வெட்கட் ரமண பெருமாள் ஸ்வாமிக்கு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5 மணிக்கு, சுப்ரபாதம், கோ தரிசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, காலை, 6 மணிக்கு, நவநீத ஆரத்தி, 7 மணிக்கு, தோமாலை சேவை, 8.15 மணிக்கு அர்ச்சனை சேவை (திருவேங்கட ஸஹஸ்ரநாமம்) நடந்தது. காலை, 9 மணிக்கு முதல் மணி, சம்ப்பணம் மற்றும் பலி, சாற்று முறையும், 9.45 மணிக்கு வாரி சர்வ தரிசனம், உற்சவர் விசேஷ திருமஞ்சன சேவை, பகல், 12 மணிக்கு, சல்லிம்பு இரண்டாம் மணி, மாலை, 3 மணிக்கு, திருக்கல்யாணம், 5 மணிக்கு, வாகன சேவையும் நடந்தது. தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு ஒய்யாளுசேவை, நித்யோத்வம், இரவு, 9 மணிக்கு ஏகாந்தசேவையும் நடந்தது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.